தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தினசரி 37 ஆயிரம் என்று தினசரி பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 20 ஆயிரம் என்ற நிலையில் பதிவாகி வருகிறது.
இந்த சூழலில், கொரோனா பாதிப்பால் மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நிலையில் கடந்த மாதம் முதல் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு மக்களை மேலும் அச்சப்படுத்தி வருகிறது. இந்த நோய் ஏற்கனவே உள்ள வியாதிதான் என்றாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களும், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களும் அதிக அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ராஜஸ்தான், குஜராத் ஆகிய வட மாநிலங்களில் இந்த வியாதியால் பலரும் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிக்சின் பி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இவற்றின் இருப்பு குறைவாக இருப்பதால், இந்த மருந்துகளை 30 ஆயிரம் குப்பிகள் அளவுக்கு தமிழ்நாட்டிற்கு உடனே ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது வரை கருப்பு பூஞ்சை நோயால் 938 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 35 ஆயிரம் குப்பிகள் மருந்துகள் தேவைப்படுகிற நிலையில் மத்திய அரசு இதுவரை 3 ஆயிரத்து 840 குப்பிகள் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நிதி ஒதுக்கியுள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில், கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் ஆம்போடெரிக்சின் பி மருந்துகளை வாங்குவதற்கு ரூபாய் 25 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிதி கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதல், ஆக்சிஜன் தயாரிப்பு, படுக்கை வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இதுவரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 280 கோடியே 26 லட்சம் நிவாரணமாக வந்துள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!