முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எழுதிய அலுவல் ரீதியான கடிதங்கள் பற்றிய ஓர் பார்வை!



  1. ஏழு பேர் விடுதலைக்காக முதல் கடிதம்


தமிழகத்தின் முதல்வராக அவர் பொறுப்பு ஏற்றதும் முதல் கடிதமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதினார்.


கடந்த மாதம் 19-ந் தேதி எழுதிய அந்த கடிதத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 7 பேரையும் விடுவிக்க கோரிய தமிழக அரசின் 2018ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.   



  1. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்


கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால், தடுப்பூசிகள் பற்றாக்குறை நாடு முழுவதும் பல மாநிலங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கினால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் எழுதினார்.





  1. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், மன நலன் கருதியும் மாநிலம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு தற்போதுள்ள சூழலில் எந்த நுழைவுத்தேர்வுகள் நடந்தாலும் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார்.



  1. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளைத் தொடங்க பிரதருக்கு கடிதம்


மதுரையில் கடந்த 2019ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், தற்போது வரை எந்த கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்றும் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார்.





  1. டவ் தே புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய அமைச்சருக்கு கடிதம்


கடந்த மாதம் வீசிய டவ் தே புயல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பல்வேறு மாநில மீனவர்களும் இந்த புயலால் காணவில்லை. இதையடுத்து, டவ் தே புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தமிழக மீனவர்கள் 16 பேரையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந் தேதி கடிதம் எழுதினார்.



  1. கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து அளிக்க மத்திய அமைச்சருக்கு கடிதம்


நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நோயால் ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 3-ந் தேதி அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்து 30 ஆயிரம் குப்பிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.