தனித் தேர்வர்களுக்கான பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்வு  எப்போது நடைபெறும் என்றும் அதில் கலந்துகொள்வது எப்படி என்றும் அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவித்துள்ளது. 


இது குறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்வு, (Science Practical Examinations) 20.03.2023 முதல் 24.03.2023 வரை அறிவியல்‌ பாட செய்முறைப்‌ பயிற்சி வகுப்புகள்‌ நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது. ஏப்ரல்‌ 2023, பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித் தேர்வர்கள்‌ மற்றும்‌ ஏற்கனவே அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்வெழுதி அத்தேர்வில்‌ தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்கள்‌, மேற்படி தேதிகளில்‌ நடைபெற உள்ள அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்வில்‌, தவறாமல்‌ கலந்துகொண்டு செய்முறைத்‌ தேர்வெழுத அறிவிக்கப்படுகிறார்கள்‌.


அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்வு நடைபெற உள்ள தேதி குறித்து, அறிவியல்‌ செய்முறைப்‌ பயிற்சி பெற்ற பள்ளியில் இருந்து அறிவிப்பு எதும்‌ தங்கள்‌ முகவரிக்கு கிடைக்கப்‌ பெறாதவர்கள்‌, இந்த அறிவிக்கையை தெரிந்துகொண்டு, அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்வில்‌ தவறாமல்‌ கலந்து கொள்ளும்‌ பொருட்டு, அப்பள்ளியின்‌ தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது’’.


இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 


10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்


தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியம் சார்பில் 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இந்த மாணவர்களுக்கு தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.


10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu


ஏப்ரல்  6ஆம் தேதி - தமிழ் (மொழித்தாள்)
ஏப்ரல் 10ஆம் தேதி - ஆங்கிலம் 
ஏப்ரல் 13ஆம் தேதி-  கணிதம்


ஏப்ரல் 15ஆம் தேதி- விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17ஆம் தேதி- அறிவியல்
ஏப்ரல் 20ஆம் தேதி- சமூக அறிவியல் 


10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.