புதிய சமையல் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்வதற்கு டெலிவரி கட்டணங்கள் ஏதுமில்லை என கேஸ் ஏஜென்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
அதன்படி,ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஜனவரி 1ஆம் தேதி, விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டது. கடந்த சில மாதங்களைப் போலவே வீட்டு பயன்பாடு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. அதேவேளையில், வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்க ரீதியான சமையல் சிலிண்டர் சென்னையில் ரூ.1917 விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரை பொருத்தவரை சென்னையில் விலை ரூ.1,068.50 எனவும், டெல்லியில் ரூ.1,053 எனவும், மும்பையில் ரூ.1,052.50 எனவும், கொல்கத்தாவில் ரூ.1,079 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேஸ் சிலிண்டர் விநியோகத்தின் போது ஒவ்வொரு வீட்டிலும் டெலிவரி சார்ஜ் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டெலிவரி சார்ஜ் அவசியமா இல்லையா என்ற குழப்பம் பலபேருக்கு உள்ளது. இதனை பற்றி கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் தெளிவாக கூறியுள்ளனர். கேஸ் டெலிவரி செய்யும் போது எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அப்படி கொடுத்தால் அது நுகர்வோரின் சொந்த விருப்பமாக தான் இருக்கும் அல்லது டிப்ஸ் என கருத்தப்படும் என கூறியுள்ளனர்.
இதுவே நுகர்வோர் நேரடியாக கேஸ் ஏஜென்சிக்கு சென்று சிலிண்டரை பெற்றால், கட்டணம் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சமையல் சிலிண்டரின் விலை ரூ.1068 என்றால் நேரடியாக கேஸ் ஏஜென்சிக்கு சென்று வாங்கினால் அதிலிருந்து ரூ.17 குறைக்கப்பட்டு ரூ.1051 மட்டுமே வசூலிக்கப்படும். கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்வது கடமையாகும் மேலும் டெலிவரி செய்த உடன் கேஸ் அடுப்பில் பொருத்தி கேஸ் லீக் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஏஜென்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லை.
கேஸ் விநியோகம் செய்யும் போது கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டாலோ அல்லது தகாத முறையில் நடந்துக்கொண்டாலோ கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறுகின்றனர்.