அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ’ஏபிபி’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
அண்மையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொன்ன குட்டிக் கதை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. அது யாருக்கு சொன்ன குட்டிக்கதை?
ஊடகங்கள்தான் அதை ஊதி ஊதிப் பெரிய செய்தி ஆக்குகிறீர்கள். கிறிஸ்துமஸ் திருவிழாவில் இயல்பாக அவர் சொன்ன கதையை அரசியல் பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விழாக்களில் எப்போதும் குட்டிக்கதை கூறி விளக்குவார். அதைப்போலவே ஓபிஎஸ்ஸும் கூறியுள்ளார். அவர் வெளிப்படையாக சசிகலாவின் பெயரைக் கூறவில்லையே?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா. அவரின் வேலை முடிந்து விட்டது. இப்போது அதிமுக நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சசிகலாவின் துரோகத்தை தமிழ்நாட்டு மக்களும் அதிமுகவினரும் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்த அடிப்படையில்தான் சசிகலாவை மன்னிக்கவே முடியாது என்று கூறினேன்.
ஓபிஎஸ் வெளிப்படையாக சசிகலாவைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த கருத்தைக் கட்சி பரிசீலிக்குமா அல்லது அவரைக் கட்சியில் இருந்து நீக்கி விடுவீர்களா?
அவர் கண்டிப்பாக அப்படிச் சொல்ல மாட்டார். அப்படிப்பட்ட சூழலும் வராது. பொதுமக்களும் கட்சிக்காரர்களும் விரும்பாத நபர்கள் சசிகலாவும் அவர் குடும்பத்தினரும். சசிகலா இல்லாமலேயேதான் ஒரு கோடியே 47 லட்சம் வாக்குகளைப் பெற்று இருக்கிறோம். 3 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அதிமுக கொடியை ஏற்றினாலோ, கட்சி லெட்டர் பேடில் கடிதம் எழுதினாலோ கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? இதுகுறித்துக் காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லாததால், காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.
சாதிப் பாசத்தின் காரணமாக ஓபிஎஸ் சசிகலாவை எதிர்க்க மறுக்கிறாரா?
அதிமுக சாதி, மதம் ஆகியவற்றை கடந்த ஒரு இயக்கம்.
அதிமுக வலுப்பட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நினைக்கிறார். அதற்கு சசிகலாவை இணைக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறாரே?
அவரவர்கள், அவரவர் கட்சி வேலையைப் பார்த்தால் போதும். பிற கட்சிகளின் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க இவர்கள் யார்? இது ஆரோக்கியம் இல்லாத விஷயம். எங்களுக்கு யாரும் இலவச ஆலோசனை சொல்ல வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு சசிகலா தேவை என்றால் பாஜகவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தங்கள் கட்சித் தொண்டர்களை மகிழ்விக்க, தாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுவதாக அண்ணாமலை தெரிவித்திருக்கலாம். திமுகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் தொடர்ந்து போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக அறிக்கை வெளியிடுவது ஏன்?
தனித்தனியாக அறிக்கை கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லையே? கூட்டாகக் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளுக்கு கூட்டறிக்கை கொடுத்துக்கொண்டுதானே இருக்கின்றனர். மாநில சட்ட - ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தனித்தனியாக அறிக்கை அளிக்கிறார்கள்.
அதிமுக மூத்த நிர்வாகி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவு என்று செய்திகள் வெளியாகின்றன. இது தேவையா? ஓடி ஒளிவது மாதிரியான செய்திகள் தவறில்லையா?
நம்முடைய ஜனநாயக நாட்டில் பல்பேறி நீதிமன்றங்கள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை யாராக இருந்தாலும் பயன்படுத்தத்தான் நினைப்பார்கள். அதிமுக பெரிய கட்சி, அதன் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வருகிறார். மாநிலத்தில் இருக்கும் ஏராளமான கிரிமினல்களைப் பிடிக்க இத்தனை தனிப்படைகள் அமைக்கப்படாதது ஏன்?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தப்படும் ரெய்டுகள் எதை உணர்த்துகின்றன?
பழிவாங்கலைத்தான் உணர்த்துகின்றன. இது ஒன்றும் புதிதில்லை. 1996-லும் இதுதான் நடந்தது. அப்போது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன. அது தொடர்கிறது.
அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முடிந்தால் அண்ணாமலை மீது கைவைத்துப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறாரே.. அதிமுக பாஜக தலைவரைக் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறதா? அவரை வலிமையான தலைவராக நினைக்கிறதா?
திமுக எங்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகளைப் புனைந்து வருகிறது. அதை நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம். மத்திய அரசை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. முடிந்தால் மத்திய அரசின் மீது கை வைத்து பாருங்கள் என்ற நோக்கத்தில் சிவி சண்முகம் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் சூழலில் திமுகவினர் பாஜகவினர் குறித்து வாய் திறக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் சபரீசனின் ஆட்சி நடைபெறுவதாகக் கூறியிருந்தீர்கள் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
அதிகாரிகள் மாற்றம் தொடங்கி அனைத்திலும் நிழல் முதலமைச்சராக சபரீசன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு கிடைக்கின்ற தகவலின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி அமலில் இருப்பதாகக் கூறியிருந்தீர்களே?
நீங்களும் கவனமாக இருங்கள். அரசுக்கு எதிராகச் செயல்பட்டீர்கள் என்றால் உங்கள் மீது குண்டாஸ் வழக்கு பாயும். திமுக அரசை எதிர்க்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக மாரிதாஸ் மீது வழக்கு போடப்பட்டது. திமுகவினர் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என எந்த சமூக ஊடகங்களிலும் எதை வேண்டுமானாலும் போடலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது சரியல்ல.
அப்படியென்றால் நாட்டின் தலைமை தளபதி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாரிதாஸ் பேசியது சரி என்கிறீர்களா?
அந்த வழக்கு விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்துப் பேச விரும்பவில்லை. ஆனால் இதுபோலப் பேசிய எல்லோரின் மீதும் வழக்கு போடப்பட்டு இருக்கிறதா?
உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராகக் கூறி வருகிறார்களே?
தமிழகத்தில் நடந்து வருவது குடும்ப ஆட்சி. இதில் ஸ்டாலின் முதல்வராக இருந்தால் என்ன? உதயநிதி முதல்வராக இருந்தால் என்ன? இன்பநிதியே முதல்வராக இருந்தால் என்ன? உங்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எதற்காக நீங்கள் அமைச்சர்களை வைத்துப் பேச வைக்க வேண்டும்?
இன்பநிதியைக் கூட அமைச்சர் ஆக்குங்கள். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால் எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்று பாமக உங்கள் மீது குற்றம்சாட்டி இருக்கிறதே?
இதுகுறித்து இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தெளிவாக பதில் கூறியிருக்கிறார். இதற்காக அக்கட்சியுடன் கூட்டணி கிடையாதா என்று நான் முடிவெடுக்க முடியாது, கட்சிதான் முடிவெடுக்கும். நாங்கள் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிற கட்சி அல்ல. இது புரிந்தவர்களுக்குப் புரிந்தால் சரி.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பேட்டியை வீடியோ வடிவில் காண: