பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதியதாக கூறப்படும் வரிகள் தற்போது கடும் எதிர்ப்புகளை கிளப்பி வந்தது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் ஒரு சிலர் இளையராஜாவை விமர்சித்து டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்தநிலையில், இசைஞானி இளையராஜாவை ஆதரிக்கும் விதமாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இளையராஜா என்ன குற்றம் செய்தார்? அறிவாலய சுற்றத்துக்கு பிடிக்காத கருத்து, குற்றமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இளையராஜா கருத்துச் சுதந்திரந்தின் அடிப்படையில் பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்தார். அறிவாலயத்தின் விருப்பப்படி கருத்து தெரிவிக்காததுதான் இளையராஜா செய்த குற்றமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் சமீபத்தில் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது. அந்த புத்தகத்தின் முன்னுரையை இசைஞானி இளையராஜா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், இளையராஜா, ”அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவைகளை மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயற்சிக்கிறது.
முத்தலாக் தடை சட்டத்தால் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே மோடியை நினைத்து பெருமைக்கொள்வார். அம்பேத்கரும், மோடியும் இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள், செயலில் நம்பிக்கை கொண்டவர்கள் எனவும் முன்னுரையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்