சென்னை பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ட்விட்டர் தளத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தீவிர முனைப்பு காட்டி உடனடியாக விசாரணை செய்தது. அப்போது பாடகி சின்மயி, வைரமுத்து மீதான தன்னுடைய பாலியல் புகாரில் மட்டும் அரசு ஏன் தீவிரம் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பலரும் நீங்கள் சட்டப்படி புகார் அளித்தால் விசாரிக்கப்படும் என்று எதிர்கருத்து தெரிவித்து வந்தனர். 


இந்தச் சூழலில் இன்று கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளா அரசு ஒஎன்வி விருதை அறிவித்தது. கேரள அரசின் விருதை பெரும் முதல் தமிழ் கவிஞர் வைரமுத்துதான். இதனைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வந்தவுடன் வைரமுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், "கேரளாவின் புகழ்பெற்ற ஒஎன்வி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன். தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும்!"எனப் பதிவிட்டிருந்தார்.




இந்தச் சூழலில் நேற்று பாடகி சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் சட்டரீதியாக அளித்த புகார் தொடர்பாகவும். தன்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கியது தொடர்பாகவும் பதிவிட்டிருந்தார். மேலும் அதில் எவ்வாறு வைரமுத்துவிற்கு இருக்கும் அரசியல் தொடர்புகள் இந்த புகார் தொடர்பான விசாரணையை கிடப்பில் போட்டுள்ளது என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார். அதில், "லீகலா போங்கன்னு கருத்து தெரிக்க விட்டுட்டு இருக்குற மக்களுகக்கு - NCW-ல கேஸ் பதிவு பண்ணி, அவங்க 3 Reminders குடுத்து, ஒரு லேடி Officer வீட்டுக்கு வந்து, எங்கிட்டயும், என் தாயார், என் கணவர், மூன்று பேர் கிட்டயும் கையழுத்துல கம்ப்ளைன்ட வாங்கிட்டு போயாச்சு.


 






இதுவரைக்கும் 17 பெண்கள் திரு வைரமுத்து அவர்களைபற்றி புகார் குடுத்துருக்காங்க. ரைஹானா Madam - அவர் அப்டித்தான்னு பேட்டி குடுப்பாங்க. மாலினி யுகேந்திரன் 'என் கண்ணு முன்னாடி நடந்தது’ன்னு சொல்லிருக்காங்க புவனா சேஷன் - அவருக்கு ஒத்துழைக்கலன்னு அவங்க career நாசம் பண்ணி விட்டார்னு பேட்டி குடுத்துருக்காங்க Us-லிருந்து சிந்து ராஜாராம் Mediaல பேட்டி குடுத்தாங்க. அதெல்லாம் மறைச்சுட்டு, சின்மயி மட்டும் தான் சொன்னாங்க, வேற யாருமே சொல்லலைன்னு என் பொய் சொல்றாங்க? ஏன்னு கேள்வி கேக்க கூடாதோ?






நக்கீரன் magazineல, பாஜக எனக்கு Bangalore-ல வீடு குடுத்து, கவிஞர் மேல அபாண்டமா பழி சுமத்த வெச்சாங்கன்னு கேவலமா பொய் சொன்னாங்க. தெரியாமத்தான் கேக்குறேன். இத்தனை பேர் இவருக்கு மட்டும் பொங்கும் கட்டாயம் என்ன? அவர் ஒரு பாடலாசிரியர் தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க?  அவரோட அரசியல் நண்பர்கள் பெயரை பயன்படுத்தி பெண்களை அச்சுறுத்துறது, மெரட்டுறது உண்மைதான். இது பல ஆண்டுகளா open a நடந்துட்டு தான் இருக்கு. இதெல்லாம் யாரு மூடி மறைத்தாலும், இல்லவே இல்லைன்னு பொய் சொன்னாலும். நான் கேள்வி கேட்டுகிட்டே டான் இருப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார். 






மேலும் கவிஞர் வைரமுத்துவிற்கு ஒஎன்வி விருது அளித்ததற்கு மலையாள நடிகை பார்வதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "புகழ் பெற்ற மலையாள கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஒஎன்வி விருதை ஒரு பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு அளிப்பது அவருடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயலாகும்" எனப் பதிவிட்டுள்ளார். 






சின்மயி கொடுத்த புகார் தொடர்பாக இதுவரை விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று அவர் பல முறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது மீண்டும் அவர் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இந்த முறையாவது அரசு அவரின் புகாரை, சரியாக விசாரிக்க நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.