பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நபருக்கு, மிக பெருமையான ஓஎன்வி விருதை வழங்குவதா என நடிகை பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், மேலும் அவ்வாறு வழங்கினால், அது மிகுந்த அவமானகரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த மலையாள கவிஞர் மற்றும் பாடலாசிரியரான, ஞானபீட விருது பெற்ற ஓஎன்வியின் பெயரில் இலக்கியத்தில் சாதனை படைத்த நபர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அவ்விருது முதன்முறையாக கேரளா அல்லாத தமிழகத்தை சேர்ந்த கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஓ.என்.வி விருதுக்கு தேர்வாகியுள்ள கவிஞர் வைரமுத்துவை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”கவிப்பேரரசு அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன். தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும்!” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் #metoo விவகாரத்தில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.என்.வி விருதை அவருக்கு வழங்குவதில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகையான பார்வதியும் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள பார்வதி "ஓ.என்.வி சார் எங்களின் பெருமை. கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரின் பங்களிப்பு ஈடு செய்யமுடியாதது. நமது கலாச்சாரம், நமது மனம் மற்றும் இதயம் அனைத்துமே அவரால் நிரம்பி இருக்கிறது" என பதிவிட்டுள்ளார். மேலும் தொடர்ந்துள்ள அவர் "அதனால் தான் சொல்கிறேன், அவருடைய பெயர் கொண்ட பெருமையான விருதை ஒரு பாலியல் குற்றசாட்டு சுமத்தப்படும் நபருக்கு வழங்குவது மிகுந்த அவமானகரமானது" என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பலர் சமூக வலைத்தளங்களில் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்படுவது குறித்து சர்ச்சையை எழுப்பிவரும் நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.