இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகள் விழிப்புணர்வு நடை மற்றும் பேரணி நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அங்கன்வாடி ஊழியர்கள், கல்லூரி மாணவியர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் ஏந்தி படி கலந்து கொண்டனர்.



குழந்தைகளின் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும், அடிப்படைக் கல்வியை பயிலும் வாய்ப்பினை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முற்றிலும் தடுத்திட வேண்டும், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி அனைத்து நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த பேரணி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, பழைய பேருந்து நிலையம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. குறிப்பாக தேசிய குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு தினம் மற்றும் சர்வதேச குழந்தைகள் தினம் மூன்றையும் ஒன்றிணைத்து இந்த பேரணியானது நடைபெற்றது.