கடத்தல், அறியாமை உள்ளிட்ட காரணங்களால் சென்னையைச் சுற்றியுள்ள ரயில் நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளைக் காப்பாற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான உதவி எண்கள் ரயில் நிலையங்களில் முறையாக இயங்காததால் இந்த சிக்கல் எழுந்துள்ளது.
சென்னையைச் சுற்றிலும் சென்ட்ரல், எழும்பூர், வில்லிவாக்கம் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் நாள்தோறும் பரபரப்பாக இயங்கும். இங்கு குழந்தைகள் கடத்தப்படுவது, வீட்டை விட்டு ஓடிவருவது, கைவிடப்பட்ட குழந்தைகள் ஆகிய காரணங்களால், குழந்தைகள் ரயில் நிலையங்களில் மீட்கப்படுவது வழக்கமாக உள்ளது.
சராசரியாக 100 குழந்தைகள் மீட்பு
இந்த ரயில் நிலையங்களில் இருந்து மாதத்துக்கு சராசரியாக 100 குழந்தைகள் மீட்கப்படுகின்றனர். இவர்களை என்ஜிஓக்கள் எனப்படும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீட்டு, நல்வாழ்வு அளித்து வருகின்றன. இதற்கிடையே இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும் ரயில்வே அமைச்சகமும் 2015-ல் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மத்திய அரசின் விதிமுறைப்படி, ரயில்வே துறை 6* 6 சதுர அடி அளவில், குழந்தைகளுக்கான உதவிமயம் அமைக்க இலவசமாக இடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குழந்தைகள் நல அமைச்சகம் ஒவ்வொரு குழந்தைகள் மையத்துக்கும் ஆண்டுக்கு 15.76 லட்சம் அளிக்கிறது.
இதற்கிடையே மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலையான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது. அதன்படி, 24 * 7 இயங்கும் குழந்தைகளுக்கான உதவி எண்ணான 1098 என்ற எண்ணை, அரசு சாரா தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் பயன்படுத்தக்கூடாது என்றும் உதவி எண்களையும் மையங்களையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளே (DCPUs) கையாள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குழந்தைகள் பாதுகாப்பு அலகுககள் நியமித்த ஊழியரை, ரயில்வே அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எண்ணிப் பார்க்கவே கவலையாக இருக்கிறது
இதனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் உதவி எண்கள் இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து அருணோதயா என்ஜிஓவின் இயக்குநர் விர்ஜில் டி சாமி கூறும்போது, ’’நகர எல்லைக்குள் ஓடிப்போகும் குழந்தைகளை, குழந்தை பாதுகாப்பு மையங்களின் ஒப்புதலோடு பெற்றோரிடம் சேர்க்கிறோம். வீட்டிவிட்டு ஓடிப்போன குழந்தைகள், கடத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் குழந்தை பாதுகாப்பு மையங்களின் முன்னால் ஆஜர்படுத்தப்படுவர். தற்போதைய நடைமுறையால், கடந்த இரண்டு மாதங்களில் ரயில் நிலையங்களுக்கு வந்திருக்கும் நிராதரவான குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கவே கவலையாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான உதவி மையங்கள் இயங்குவதில் புதிய நடைமுறையை மாற்றி, பழையபடி அனுமதி அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.