இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி கடந்த சில நாட்களாக  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில் தற்போது லேசான வெயில் முகம் காட்டும் சூழலில் மதுரையில் தீபாவளி விற்பனை  களைகட்டியுள்ளது.



 



தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மதுரையில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. மதுரை முக்கிய கடை வீதிகளான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்துத்தூண், மஞ்சனக்காரத்தெரு, கீழவெளி வீதி , காமராஜர் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க காலை முதல்  ஆர்வமுடன் வருகை தர தொடங்கியுள்ளனர். 

 





மேலும், கடைகளை தவிர சாலையோர கடைகளிலும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பொருட்களை மக்கள் வாங்கி செல்கிறார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால் மதுரை மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பொருட்களை வாங்கிசெல்கின்றனர். ஆடைகளின் விலை கடந்த ஆண்டை விட இந்தாண்டில் அதிகரித்து உள்ள நிலையிலும் விற்பனை அதிகரித்துள்ளது. 

 



 

தீபாவளி பண்டிகைக்கான ஆண்கள் பெண்களுக்கு என லியோ ஆடை, ஜெயிலர் ஆடை என புதிய ரக ஆடைகளும், வீட்டு உபயோக பொருட்களும்  அதிகளவில் விற்பனையாகின்றது. தீபாவளி விற்பனை தொடங்கிய நிலையில் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் மூலமாக பொதுமக்களின் நடமாட்டம்  கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே மைக் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.




 

4 நாட்களுக்கு கனமழை அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மாலை நேரங்களில் கனமழை பெய்வதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காலை முதலே வாங்குவதற்கு வருகை தர தொடங்கியுள்ளனர். தொடர் மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் பள்ளம் உருவாகி தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாத சூழலும் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துவருகின்றனர்.