டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு நடைபெற்று 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகாத முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான ட்வீட்டுகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. 


அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த  குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.  அத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்த  11.78 லட்சம் பேரில், 9.94 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அவர்களில் இருந்து ஒரு பணிக்கு 10 பேர் வீதம் 57,641 பேர் முதன்மைத்  தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இதனைத் தொடர்ந்து இவர்களில்  55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. 9 மாதங்களைக் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியீடில் தாமதம் நிலவுகிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளன என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.


எதிர்காலம் பாதிக்கப்படுவதாக வேதனை


எனினும் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை 9 மாதங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும்தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை  திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவைதான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனாலும், அப்பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பணிகளுக்கு முதன்மைத் தேர்வு நடத்தி 7 மாதங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில்தான், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை நடத்தியது. அந்தத் தேர்வுகளில் 14,624 தேர்வர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் 9 தாள்களை எழுதினார்கள். அதன்படி, மொத்தம் 1 லட்சத்து 34,616 தாள்கள் திருத்தப்பட வேண்டும். அந்த தாள்கள் மொத்தம் 4 வகையானவை. 


அனைத்துத் தாள்களையும் அக்டோபர் மாதத்தில் திருத்தி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முடிவை அறிவித்திருக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆனால், அதைவிட குறைவான பணிச்சுமை கொண்ட  குரூப் 2 முதன்மைத் தேர்வுகளின் முடிவுகளை 9 மாதங்களாகியும் வெளியிட முடியாமல் திணறிக்  கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இதிலிருந்தே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாட்டு வேகத்தை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.


டிஎன்பிஎஸ்சியின்  செயல்திறன் இன்மை


முடிவுகளை வெளியிடுவதில் மட்டுமல்ல... தேர்வுகளை நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் அதன் செயல்திறன் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. கடந்த பிப்ரவரி  25&ஆம் நாள் நடைபெற்ற முதன்மைத் தேர்வுகளின் போது, பெரும்பான்மையான மையங்களில் மிகவும் தாமதமாக தேர்வு தொடங்கப்பட்டதுடன், பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குழப்பம், மன உளைச்சலால் பல தேர்வர்கள் சரியாக தேர்வு எழுத முடியவில்லை.


தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை பொழுதுபோக்குக்காக எழுதுவதில்லை. அதில்தான் தங்களின் எதிர்காலம் இருப்பதை உணர்ந்து பல ஆண்டுகள் உழைத்து தேர்வுக்கு தயாராகின்றனர். அந்தத் தேர்வுகளை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் செய்யப்படும் தாமதமும், குளறுபடிகளும் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.


இந்தியாவின் மிகக் கடுமையான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்தக் குழப்பமுமின்றி 10 மாதங்களில் நடத்தி முடிவை வெளியிடுகிறது. ஆனால், நான்காம் தொகுதி   தேர்வுகளை நடத்தி முடிக்க இரு ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம், அறிவிக்கப்பட்டு 21 மாதங்களாகியும் குரூப் 2 தேர்வு நடைமுறைகளை முடிக்க வில்லை. கண்ணுக்குத் தெரியக் கூடிய இக்குறைகளை ஆணையம் சரி செய்து கொள்ள வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.