தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.




கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்ததன் அடிப்படையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின்  மூலம்  பொதுமக்கள்  தங்களின்  அடிப்படை  தேவைகளை  தாங்களே திட்டமிட்டு கொள்ளலாம். கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாரா தொழில்கள் ஆகியவை குறித்து  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக  காந்தி ஜெயந்தி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.



      


மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் இந்தியாவிலே மற்ற மாநிலங்களை விட பல்வேறு நிறைய முன்னோடி திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல் படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் நோயாளிகளின் இல்லத்திற்கே சென்று மருத்துவம் அளிக்கின்ற முத்தான திட்டம், கல்வி, மதிய உணவுதிட்டம் மற்றும்  முதல் முறையாக குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். இது போன்ற பல்வேறு செயல்படுத்தப்பட்டு வருகிறது அதே போன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களின் இரத்த சோகையை தடுப்பதற்காக பொக்கிஷம் திட்டம் திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு 6000 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் விதமாக வேலை கொடுப்பவர்களுக்கும் வேலை தேடுபவர்களையும் இணைக்கும் திட்டமான பாலம் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதில் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.




மேலும், இத்திட்டத்தில் மூலம் கிராமங்களுக்கு சென்று உள்ளூரில் இருக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக சிறு தொழில் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆண்களுக்கான கருத்தடை திட்டமான தங்க தந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ரூ.5000 உள்ளிட்ட இதர அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்பி கல்வி , உயர்கல்வி மற்றும் வேலையை உருவாக்கி தருவதை உறுதி செய்யவேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் குழந்தை திருமணம் நடைபெற்றால்  அதை தடுப்பதற்கு கரூர் மாவட்டத்தில் உள்ள whatsapp 8903331098  நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி பெண் குழந்தைகளுக்கு ரத்த சோகை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளோம். அதே போல் கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள நம்ம ஊர் சூப்பர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். பொதுமக்களாகிய நீங்களும் உங்கள் ஊரையும் உங்கள் வீட்டையும் உங்கள் சுற்றத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஊராட்சி பகுதிகளில் இருந்து குப்பைகளை சேகரிப்பதற்கு வரும் பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும். பாலிதீன் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும். அனைவரும் பொதுமக்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். 





தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் அதன் மூலம் கொசு உற்பத்தியை தவிர்த்து டெங்கு காய்ச்சல் வராமல் தவிர்க்கலாம். எனவே இங்கு கூறிய கருத்துக்களை பொதுமக்கள் தவறாத கடைபிடித்து சுத்தமாகவும் சுகாதாரமாக வாழ வேண்டும்” என தெரிவித்தார். முன்னதாக பல்வேறுத்துறை சார்பில் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கிணை மாவட்ட ஆட்சித்தலைவர்பார்வையிட்டார்கள். பின்னர், மகளிர் திட்டத்தின் சார்பில் 17 மகளிர் சுயவுதவி குழுக்கள் தலா ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை சிறு கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் மந்திராச்சலம், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் தணிக்கை நீலாக்குமார். திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வாணிஈஸ்வரி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபிணா, மாவட்ட வழங்கள் அலுவலர் தச்ணாமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, நல அலுவலர் நாகலெட்சுமி, மண்மங்கலம் வட்டாட்சியர் ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.