பாஜக ஆட்சியில் அதிகாரத்துக்கு எதிராக பேச துணிந்தவர்கள் பலரும் மிரட்டப்பட்டனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”அச்சமின்றி பணியாற்றுதல் வேண்டும்”
இன்று மே மாதம் 3 ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பத்திரிகை தினத்தையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமானது சிதைக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் குறைந்த தரவரிசையில் இந்தியா உள்ளது. கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்ற பத்திரிக்கையாளர்களின் கொலைகள், சித்திக் கப்பன், ராணா அய்யூப் போன்ற பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள். மேலும் அதிகாரத்திற்கு எதிராக உண்மையை பேசத் துணிந்த பலரையும் தொடர்ந்து மிரட்டப்படுவதையும் பாஜக ஆட்சியில் பார்க்க முடிகிறது.
ஜனநாயகத்தில் பத்திரிகைகளின் பங்கை நாம் கொண்டாடும் போது, சுதந்திரமான பேச்சுரிமையின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும், பத்திரிகையாளர்கள் அச்சமின்றி அல்லது அடக்குமுறை தணிக்கையின்றி பணியாற்றுவதை உறுதி செய்வதற்கும், நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக பத்திரிகை சுதந்திர தினம்:
1993ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டு மே 3ஆம் தேதி, உலக நாடுகள் சபை உலக பத்திரிகை சுதந்திர தினத்தை கடைபிடித்து வருகிறது. 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ மூலம் ஆப்ரிக்க பத்திரிகையாளர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபையால் பத்திரிகை சுதந்திர நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஊடக சுதந்திரம், பத்திரிகையாளர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நலன்களை வலியுறுத்தும் நாளாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், பத்திரிகை சுதந்திரம் குறித்தான முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில், சுதந்திரமான பேச்சுரிமையின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும், பத்திரிகையாளர்கள் அச்சமின்றி அல்லது அடக்குமுறை தணிக்கையின்றி பணியாற்றுவதை உறுதிசெய்வதற்கும், நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமானது மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.