கண்காணிப்பு கேமரா செயலிழப்பு 


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9:28 மணி முதல் 9:58 மணி வரை 30 நிமிடங்கள் வாக்கு என்னும் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை. இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக பழுது நீக்கப்பட்டு, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:


காலை ஒன்பது முப்பது மணி அளவில் யுபிஎஸ்-சில் ஏற்பட்ட பழுது காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின் சாதனங்கள் இயங்காமல் தடை ஏற்பட்டது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜி மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பழுது சரி செய்யப்பட்டது என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மனு 


இந்நிலையில் பழுது ஏற்பட்டது குறித்து விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் ஆலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பழனியிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அப்போது மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின் பழுது ஏற்படாத வண்ணம் தேர்தல் அலுவலர் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமெனவும், தேர்தல் அலுவலர் மீது நம்பிக்கை உள்ளதால் இந்த மனுவானது பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வழங்குவதாக தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பேட்டியளித்த ரவிக்குமார் கடந்த ஆறு முறை தேர்தலில் போட்டியிட்ட போது இது போன்ற மின்சாதன பழுது ஏற்படவில்லை என்றும் மின் பழுது ஏற்படா வண்ணம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.