நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கான தி.மு.க. பார்வையாளர்கள் உடன், முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.


முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை:


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தி.மு.க. பார்வையாளர்கள் உடன், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுதேர்தல் நடைபெற உள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தி.மு.க. சார்பில் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் அந்த பார்வையாளர்கள் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்தபடி, காணொலி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.  இதில் தி.மு.க.வில் புதியதாக உறுப்பினர்களை சேர்ப்பது, தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகளை தொடர்வது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, ஒவ்வொரு தொகுதியிலும் புதியதாக 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க, தொகுதி பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடி ஆக உயர்த்த இலக்கு:


அடுத்த ஆண்டு மே மாதம் வாக்கில் தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் உள்ள சூழலில், தற்போதே திமுக தேர்தல் பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது. கட்சியை பலப்படுத்துவது, தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைப்பது போன்ற பல்வேறு பணிகள் தீவிரமாக மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் தொண்டர்களுக்கு கட்சி தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் திமுகவின் உறுப்பினர் எண்ணிக்கையை இரு மடங்காக்கும் புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு அனைத்துப் பகுதிகளிலும் விரைவாகவும், சரியாகவும், முழுமையாகவும் நடைபெற வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.  கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட உள்ளதை முன்னிட்டு, ஜுன் மாதம் 3ம் தேதிக்குள் இந்த இலக்கை எட்டவும் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கடந்தாண்டு முதலே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்திய திமுக:


கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோதே, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதாமல், களத்தில் பணியாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.  நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை தொடங்குங்கள் எனவும்,  நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணியுங்கள் என்றும் 7 மாதங்களுக்கு முன்பே திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதனடிப்படையில் திமுகவை வலுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


முன்கூட்டியே தேர்தல்?


இந்நிலையில் தான், நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் தொடர்பாக, தொகுதிகளுக்கான பார்வையாளர்கள் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். திமுகவின் இந்த துரித நடவடிக்கைகள், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒருவேளை முன்கூட்டியே நடைபெற வாய்ப்புள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பிய்யுள்ளது.