தெலுங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, இப்போதிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கி வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டனர். 


கடந்த வாரம் ஹைதராபாத் அருகே உள்ள செவல்லாவில் நடைபெற்ற விஜயசங்கல்ப சபா நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தெலுங்கானாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புக்கு புறம்பாக உள்ள இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம். அந்த இட ஒதுக்கீட்டை பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவோம்.


ஓவைசியின் கைகளில் ஸ்டீயரிங் இருக்கும்போது கார்( சந்திரசேகர்ராவ் கட்சியின் சின்னம்) எப்படி சரியான திசையில் செல்லும்? 2024ம் ஆண்டு பிரதமர் ஆகிவிடலாம் என்று சந்திரசேகர் கனவு காண்கிறார்.


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நரேந்திர மோடியே மீண்டும் அந்த இடத்தை பிடிப்பார். நீங்கள் உங்கள் இடத்தை மீண்டும் தக்க வைப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களை பதவியில் இருந்து இறக்கும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். பொதுமக்களிடம் இருந்து பிரதமர் மோடியை தள்ளி வைக்க சந்திரசேகர ராவால் முடியாது” என்று பேசினார். 


இந்த நிலையில் ’உங்களின் ஒருவன் பதில்கள்’ அடிப்படையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில், “பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறாரே? முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்கிய கட்சியின் தலைவராக உங்கள் கருத்து என்ன? ” என்று கேள்வி கேட்கப்பட்டது. 


இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “சிறுபான்மை சமூகத்தினர் மீதுள்ள வன்மம்தான் இதன் மூலமாக வெளிபடுகிறது. தேர்தல் அரசியல் லாபத்திற்காக உள்துறை அமைச்சர் இப்படி சொல்லியிருக்கிறார். இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திபடுத்தும் என பாஜக அரசு அவர்களாகவே கற்பனை செய்கிறார்கள். ஆனால், உண்மை அப்படி இல்லை. பாஜகவிற்கு வாக்கு அளிக்காத பெரும்பாலான மக்களும் இந்துக்கள்தான். அவங்க அமைதியையும், சகோதரத்துவத்தையும் விரும்புகின்ற மக்கள். பாஜக தங்களது வெறுப்புணர்ச்சியை திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களின் மனநிலை என காட்ட நினைக்கிறது. அதுக்கு பாஜக ஆதரவு ஊடகங்களும் துணை நிற்கிறது.


பாஜகவின் ஊது குழலாக மாறி, ஜனநாயகத்தின் 4வது தூண் என்பதை மறந்து பாஜகவை தாங்கி பிடிக்கிற சில ஊடகங்கள். இப்படியான சில காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பு அரசியலை பாஜக செஞ்சுட்டு இருக்கு. மதசார்பின்மையை அரசியலைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில் உள்துறை அமைச்சரே இப்படி பேசுவது அரசியலமைப்பு சட்டத்தை மீறுகின்ற செயல். மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்காங்க. நாங்கள் மக்களை நம்புகிறோம். இந்திய மக்களின் மனசாட்சி என்றைக்கும் உறங்கிடாது என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.