சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட விபத்து தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 


கடந்த 2014 ஆம் ஆண்டு மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தற்போதைய முதல்வர் ஸ்டாலின், 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் பலியாகினர்; ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் தேடுதல் பணிகளும் நிறுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதுபற்றி உயர்நீதிமன்றத்தில் அறிவுறுத்தலின்பேரில், அங்கே கட்டப்பட்டு வந்த மற்றொரு அடுக்குமாடி கட்டிடமும் பாதியிலேயே கைவிடப்பட்டது. அந்த கட்டிடம் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெடி வைத்து, பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது.                                 


இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.


சிறப்பு புலனாய்வு குழு விசாரணை திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி, இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அப்போது திமுக பொருளாளராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


அந்த மனுவில், உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒரு நபர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அதன் பரிந்துரை அடிப்படையில், காப்பீட்டை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


கடைசியாக, கடந்த 2017 ம் ஆண்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, ஏழு ஆண்டுகளுக்குப் பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.