புதுச்சேரி: புதுச்சேரியில் கடலில் குளித்தபோது காணாமல் போன 4 பேரில் ஒரு சிறுமியின் உடல் கரை ஒதுங்கியது. புதுச்சேரியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 2 பேர் மற்றும் 2 இளைஞர்களை காணாமல்போயினர். நெல்லித்தோப்பை சேர்ந்த மாணவிகள் லேகா (14), மோகனா (16) ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்றது. பள்ளி மாணவன் நவீன், கேட்டரிங் ஊழியர் கிஷோர் (16) ஆகியோரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. சிறுமி லேகாவின் உடல் வீராம்பட்டினம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.


புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி மாயமான 4 பேரில் ஒரு மாணவி, ஒரு மாணவரின் உடல் நேற்று கரை ஒதுங்கிய நிலையில் இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், இவரின் மனைவி மீனாட்சி (47). இவர்களுக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மோகனா (16), 10ம் வகுப்பு படிக்கும் லேகா (14) என 2 மகள்கள் உள்ளனர். இவர்களின் நண்பர்கள் எல்லைப் பிள்ளைச்சாவடியை பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவரான நவீன் (12), கேட்டரிங் கல்லூரி மாணவர் கதிர்காமம் பகுதியை சேர்ந்த கிஷோர் (17), மீனாட்சியுடன் 4 மாணவ, மாணவிகளும் புத்தாண்டை முன்னிட்டு பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரைக்கு நேற்று வந்தனர். மீனாட்சி மணல் பரப்பில் அமர்ந்திருந்தார்.


4 பேரும் கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்டு மீனாட்சி சத்தமிட்டார். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றும் பலனில்லை. அவர்கள் 4 பேரும் கடலில் மாயமாகினர். தீயணைப்பு துறை வீரர்கள், ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் போலீஸார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை சின்ன வீராம்பட்டிணம் கடல் பகுதியில் மாணவர் ஒருவரது உடலும் கரை ஒதுங்கியது. அந்த மாணவர் கிஷோர் என்பது தெரிய வந்தது. இருவரது உடலையும் பிரேதப் பரிசோதனைக்கு  அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். மேலும் மற்ற 2 பேரையும் தீவிரமாக கடற்கரையோரப் பகுதிகளில் தேடி வருகின்றனர்.