செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த  அல்லாணுார் பகுதியில், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி குடிசை வீடு எரிந்து உடல் கருகிய நிலையில்  ஆண் சடலம் ஒன்று  கண்டெடுக்கப்பட்டது. கொலையா தற்கொலையா என ஒரத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இதையடுத்து கொலை என்பது உறுதியாகி, கொலையில் தொடர்புடைய டில்லிபாபுவின் நண்பரான, சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்,  என்பவரை நேற்று, கைது செய்தனர். 

 

இன்சூரன்ஸ்

 

அவருக்கு உடந்தையாக இருந்த வேலுார் மாவட்டம், கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்,  தாம்பரம் அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த  கீர்த்தி ராஜன்,  ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் சுரேஷ் மற்றும் குடிசை வீட்டில் கருகிய நிலையில் சடலமாக கிடந்த டில்லி பாபுவும் நண்பர்கள். இதில், சுரேஷ், சென்னையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக  இருந்துள்ளார். இவர், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்து காப்பீடு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

 

உயிருடன் இருக்கும் பொழுதே பெற வேண்டும்

 

இத்தொகையை, தான் உயிருடன் இருக்கும் பொழுதே பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தன் வயதுடைய நபரை, பல மாதங்களாக தேடி வந்துள்ளார். அப்போது, அயனாவரம் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, சுரேஷ் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த டில்லிபாபுவின் நினைவு வந்துள்ளது. இதனால், டில்லி பாபுவை தேடியுள்ளார். தற்போது எண்ணுார் அடுத்த  ஏராணாவூர்  பகுதியில் வசித்து வருவதை அறிந்து, அங்கு,  தனது கூட்டாளிகளான ஹரி கிருஷ்ணன் மற்றும் கீர்த்தி ராஜனுடன், டில்லிபாபு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, சில தினங்கள் தங்கி, டில்லிபாபுவின் அம்மா லீலாவதி,மற்றும் டில்லிபாபுவிடம், நன்றாக பேசி பழகி உள்ளனர். பின், கடந்த செப்டம்பர் , 9ம் தேதி வெளியில் சென்று வரலாம் என டில்லிபாபுவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

 

சடலத்தை குடிசை வீட்டில் வைத்து

 

அங்கிருந்து, இரு சக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் வந்து, இருசக்கர வாகனத்தை, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் விட்டு பின், பேருந்தில் பாண்டிச்சேரி சென்று, மது வாங்கிக் கொண்டு, மறுபடியும் பாண்டிச்சேரியில் இருந்து அச்சிறுபாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில், தான் ஏற்கனவே, திட்டமிட்டு அப்பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கி, அதில் குடிசை வீடு கட்டியுள்ளார். அந்த குடிசை வீட்டிற்கு வந்துள்ளனர்.  பின், சம்பவத்தன்று செப்டம்பர் 15ல், ஹரி கிருஷ்ணன், கீர்த்தி ராஜன், சுரேஷ், டில்லிபாபு ஆகியோர் குடிசை வீட்டில் மது அருந்தி உள்ளனர். அப்போது, சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்தி ராஜன் ஆகியோர், ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, டில்லி பாபுவின் கழுத்தை நெறித்து, கொலை செய்துள்ளனர். பின், சடலத்தை குடிசை வீட்டில் வைத்து, குடிசை வீடு முழுவதும் பெட்ரோல் ஊற்றி, குடிசையை தீ வைத்து கொளுத்தி, பின், அங்கிருந்து தப்பி, அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

 

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

 

இதனிடையே, குடிசை வீட்டில் எறிந்த நபர் சுரேஷ், என உறுதிப்படுத்த, சுரேஷ்-ன் அக்காவான மரிய ஜெயஸ்ரீ என்பவர் ஒரத்தி போலீசாரிடம் புகார் அளித்து, செங்கல்பட்டு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் இருந்து சடலத்தை, உடற்கூறாய்வு முடிந்து, சடலத்தை பெற்றுக்கொண்டு, அயனாவரம் பகுதியில் அடக்கம் செய்தனர். சுரேஷ் உயிரிழந்து விட்டதாக, அப்பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்நிலையில், டில்லிபாபுவின் அம்மா லீலாவதி என்பவர், நண்பர்களுடன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற, தனது மகன் குறித்து தகவல் ஏதும் இல்லை என கூறி எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

வழக்கு பதிவு

 

அங்கு வழக்கு பதிவு செய்து கிடப்பில் போடப்பட்டுள்ளதை அறிந்து, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில், மீண்டும் புகார் அளித்துள்ளார். அங்கும் விசாரணை செய்து, மகன் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது. அப்போது, இறந்த டில்லிபாபுவின் அண்ணன் பழனி மற்றும் லீலாவதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்தி ராஜன் அவர்களுடன், வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில், சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்தி ராஜன் ஆகியோர் அரக்கோணம் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து, அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், இன்சூரன்ஸ் தொகையான ஒரு கோடி ரூபாய் பெரும் நோக்கில், நண்பர்களான கீர்த்தி ராஜன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாயும், சுரேஷ் 60 லட்சம் ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என  அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு, ஒரே வயதுடைய நபரான டில்லி பாபுவை கொலை செய்து, குடிசை வீட்டில் வைத்து எரித்து, தான் இறந்ததாக நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

கூட்டாளிகள் அதிர்ச்சி

 

பின், கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக சுரேஷ் வேறு ஒரு நபரை அணுகி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த வழக்கு தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளதால் பணம் பெற முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் கூறியுள்ளனர். இதனால் சுரேஷ் மற்றும் கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்சூரன்ஸ் பணத்தை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக, நண்பனை கொலை செய்து தான் இறந்ததாக, ஊர் மக்களையும், இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் ஏமாற்ற நினைத்து, சிறைக்கு சென்ற நபர்களால் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.