கடலூரில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து மழையால் பாதித்த விளைநிலங்களை பார்வையிட்டார். மேலும், நிவாரண உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதலமைச்சர் நேரில் ஆய்வு :
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார உதவிகளை வழங்கினார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் மூழ்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
விளைநிலங்கள் :
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 331.58 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் மூழ்கியுள்ளது. சம்பா நடவு செய்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 208 கிராமங்களை சேர்ந்த 4655 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்துள்ளது. இது போன்று காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் 12 கிராமங்களில் 123 ஏக்கர் அளவில் நீரில் மூழ்கியுள்ள நிலையில் 190 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என 271 வீடுகள் மழையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 63 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் தேதி பெய்த மழையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கால்நடைகளை பொருத்தவரை ஆடு, மாடு என 108 கால்நடைகள் உயிரிழந்தது.
இரண்டு முகாம்களில் மழையின் பாதிப்பு காரணமாக 97 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 43 கிலோ மீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 62 இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை, ஜெயங்கொண்டபட்டினம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் 231 குடியிருப்பு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன.
நிவாரண உதவி
கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளுக்குட்பட்ட கூரைவீடு பகுதி சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4100/- வீதம் 41,000 ரூபாயும், முழுமையாக கூரைவீடு சேதமுற்ற ஒரு பயனாளிக்கு 5000 ரூபாயும், ஓட்டு வீடு பகுதி சேதமடைந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5.200/- வீதம் 10,400 ரூபாயும், கால்நடையை இழந்த ஒரு பயனாளிக்கு 16,000 ரூபாயும், என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.72,400/- மதிப்பிலான நிவாரண உதவிகளையும், வேட்டி. புடவை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
TN Rain Alert: அடுத்த 3 மணி நேரம்..! 20 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை...! எங்கெங்கு...?
அதைத் தொடர்ந்து கனமழையினால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் வட்டம், வல்லம்படுகைக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளை பார்வையிட்டார். அப்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.