"நாளையை நோக்கி இன்றே-தலை நிமிர்ந்த தமிழ்நாடு" என்ற என்ற தலைப்பில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு இன்று சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "2030ம் ஆண்டுக்குள் தொழில்துறையில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நாம் அடைய வேண்டும் என்பதே இலக்கு" என்றார்.
நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் எனது அன்பான நன்றி. கடந்த 15 மாத ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எனக்கு முன்பு பேசியவர்கள் கூறினர்.
குறிப்பாக தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் தமிழ்நாடு தொழில்துறையில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு காரணமாக திகழும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐஏஎஸ், தொழில்துறை அதிகாரிகள் ஆகியோரை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். தொழில்துறை சார்பில் கடந்த 15 மாத ஆட்சிக் காலத்தில் எத்தனையோ மாநாடுகளை நாம் நடத்தி இருக்கிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்காக, திட்டங்களை வகுப்பதற்காக, தொழில் கொள்கைகளை வெளியிடுவதற்காக, ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக இப்படி ஏராளமான மாநாடுகளை நமது அரசு நடத்தியுள்ளது.
அவை அனைத்தும் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலன்களை அளித்துள்ளது. அந்த வரிசையில் இந்த மாநாடும் அமையும். மேம்பட்ட உற்பத்திக்கான இரண்டு திறன்மிகு மையங்களை திறந்து வைத்தல், மதுரை மற்றும் சென்னையில் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி மையங்களை தொடங்கி வைத்தல், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் ஆகியவை இந்த மாநாட்டில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டு தொழில்துறைக்கு நாம் வைத்துள்ள இலக்கு மிகப் பெரியது. 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதே இலக்கு.
திறன்மிக்கவர்கள் நமது மாநிலத்தில் மிக அதிகம். இதன்காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் நமது மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருகின்றன. பொதுவாக உற்பத்தியை அந்தத் துறையை விட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால் தான் பெரிய அளவில் வளர்ச்சியை அடைய முடியும் என்று சிலர் கருதுகிறார்கள்.
ஆனால், நம்மை பொருத்தவரை உற்பத்தி மற்றும் சேவைத் துறை ஆகிய இரண்டுமே முன்னிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியை அடைய முடியும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முன்னதாக, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம், தமிழ்நாடு ஸ்மார்ட் மறறும் மேம்பட்ட உற்பத்தி மையம், மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை, 2022 கையேடு வெளியிடப்பட்டது. கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விழாவில் பங்கேற்றார். அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப்படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்ய தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.