1810 ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தயாரித்த தென்னிந்தியாவின் வரைபடத்தை யாரேனும் பார்த்து இருக்கிறீர்களா? அந்த வரைபடத்தில் கோவை என்ற ஊரை எங்கு தேடினாலும் கிடைக்காது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முன்னணி நகரங்கள் இடம் பெற்றிருந்த அந்த வரைபடத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகியவை இருக்காது. அப்போது இவ்வூர்கள் எல்லாம் முக்கியத்துவம் இல்லாத சிறு கிராமங்களாக இருந்துள்ளதே அதற்கு காரணம்.
ஆனால் இன்றைக்கோ... தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம், தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நகரம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது கோயம்புத்தூர். சுவையான சிறுவாணி குடிநீருக்கும், கொங்கு தமிழுக்கும், மிதமான தட்ப வெப்ப நிலைக்கும் பெயர் பெற்ற கோவை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இடமாக உள்ளது.
கோவையின் வளர்ச்சிக்கான காரணிகள்
கோவை நகரை மக்கள் வாழத் தகுதியற்ற ஊர் என ஆங்கிலேயர் குறிப்பிட்ட காலம் மாறி, இன்று இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் ஊராக மாறியுள்ளது. ஒரு சாதாரண நிலப்பரப்பு மாபெரும் தொழில் மையமாக உருவாகியுள்ளது. வற்றாத ஜீவ நதியோ, துறைமுகமோ, கனிம வளங்களோ, வரலாற்று முக்கியத்துவமோ இல்லாத கோவை மாநகரம், சுமார் 200 ஆண்டுகளுக்குள் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.
1862 ல் சென்னையின் கிழக்கு கடற்கரையையும், மங்களூரின் மேற்குக் கடற்கரையையும் கோவை வழியாக இணைத்து உருவாக்கிய WEST COAST EXPRESS ரயில் வசதி, 1882 ல் சர் ராபர்ட் ஸ்டேன்சால் அறிமுகம் செய்யப்பட்ட பஞ்சாலைகள், 1931 ல் கோவைக்கு வந்த பைகாரா மின் உற்பத்தி ஆகிய 3 காரணிகளும் கோவையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட, தொழிலாளர்களின் அயராத கடின உழைப்பால் கோவை மாநகரம் உயர்ந்து நிற்கிறது.
கோவை உருவான வரலாறு
கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் ஆகியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களுடன் வணிகம் நடைபெற்றுள்ளது. அதற்கான சான்றுகள் நொய்யல் நதிக்கரையோரங்களிலும், பாலக்காட்டு காணவாய் வழியாக மேற்கு, கிழக்கு கடற்கரைகளை இணைக்கும் ராஜா கேசரி பெரு வழியிலும் கண்டறியப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் நிலப்பரப்பு ஒரு குறிப்பிட்ட அரசர்களின் ஆளுகைக்குள் கீழ் நிரந்தரமாக இருந்ததில்லை. பல்வேறு அரசுகளின் ஆளுகைக்கு கீழ் மாறி மாறி இருந்து வந்துள்ளது.
சேரர், சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், பிரிட்டிஷ் என பலரின் ஆளுகைக்கு கீழ் இருந்துள்ளது. கோட்டை மேடு பகுதியில் இருந்த கோட்டைக்காக திப்பு சுல்தானும், ஆங்கிலேயர்களும் போர் புரிந்துள்ளனர். திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பின்னர் 1799 ல் கோவை ஆங்கிலேயர் வசமானது. அப்போது பவானி, தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் தலைநகரமாக ஏற்றனர். பின்னர் ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதியன்று கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர்.
கோவை மாவட்ட எல்லைகள்
கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது வடக்கு எல்லையாக மைசூரும், மற்றொரு புறம் சேலம் மாவட்டத்தின் காவிரி ஆறும், தென் கிழக்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும், மேற்கே கொச்சி, மலபார், நீலகிரி மாவட்டத்தையும் எல்லையாக கொண்டிருந்தது. 1868 ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் முதல் பிரிவினை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோவையில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது.
கடந்த நுற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டங்கள் இருந்தது. பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு, கரூர் கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை ஆகியவை இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கொள்ளேகால் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மற்ற வருவாய் வட்டங்கள் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களாக பிரிந்து சென்றன.
கோவையின் தொழில் வளர்ச்சி
கோவை நகரம் 19 ம் நூற்றாண்டில் கடும் பஞ்சங்களிலும், 20 ம் நூற்றாண்டில் காலரா, பிளேக் ஆகிய கொள்ளை நோய்களிலும் சிக்கி பல்லாயிரம் மக்களை இழந்தது. பின்னர் நகரப்பகுதி விரிவாக்கம், சுகாதாரமான குடிநீர் ஆகியவை அந்நிலையை மாற்றியது. 1866 ம் ஆண்டில் கோவை நகராட்சியாக தரம் உயர்ந்தது. 1890 ம் ஆண்டில் துவக்கப்பட்ட ஸ்டேன்ஸ் மில் எனப்படும் கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் பஞ்சாலை உற்பத்தியையும், நகரின் தொழில் வளர்ச்சியையும் துவக்கி வைத்தது. பைகாரா மின்சாரம் கோவைக்கு வந்த பின்னர், பஞ்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த நூற்றாண்டில் கோவைவாசிகளின் வாழ்வாதரமாக பஞ்சாலைகள் விளங்கின. பின்னர் பம்ப், மோட்டார் தொழில்களும், இயந்திர பாகங்களை உற்பத்தி செய்யும் பவுண்டரிகளும் என அதனை சார்ந்து பல்வேறு தொழில்கள் உருவாகின. வெட் கிரைண்டர் கோவையில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இப்படி புதிய புதிய தொழில்கள் இணைந்து கோவையை தொழில் நகரமாக உருவெடுக்கச் செய்தன. பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.
1831 ம் ஆண்டில் ஆடிஸ் என்பவரால் துவங்கப்பட்ட லண்டன் மிசினரியே கோவையின் முதல் பள்ளி. இன்று பல்வேறு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் புகழ் பெற்ற நகரமாக கோவை உள்ளது.1816 ம் ஆண்டில் நீதிமன்றமும், 1862 ம் ஆண்டில் சிறைச்சாலையும் கோவைக்கு வந்தன. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் கோவையை சேர்ந்தவரே. வெரைட்டி ஹால் பகுதியில் சாமிக்கண்ணு வின்செண்ட் முதல் திரையரங்கை கட்டி, தமிழ் சினிமாவின் ஆரம்பத்தை துவக்கி வைத்தார். செண்ட்ரல் ஸ்டுடியோ, பட்சி ராஜா ஸ்டுடியோ ஆகியவற்றில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய கோவை
கொங்கு தமிழுக்கும், சிறுவாணி நீருக்கும் பெயர் போனதாக கோவை விளங்கி வருகிறது. இயற்கையின் கொடையாக மேற்கு தொடர்ச்சி மலை விளங்கிறது. உயிர் சூழல் மண்டலமாக உள்ள அவை, வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் அணைகள் உள்ளன. வால்பாறை தேயிலை உற்பத்திலும், பொள்ளாச்சி தென்னை உற்பத்தியிலும், சூலூர், கருமத்தம்பட்டி பகுதிகள் விசைத்தறி தொழிலிலும், புற நகர் பகுதிகள் விவசாயத்திலும் சிறந்து விளங்கி வருகின்றன.
பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கோவை, நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தொழில் துறையிலும், கல்வி துறையிலும் முன்னணி நகரமாக உருவெடுத்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் சாதனைகளை புரிந்து வருகிறது. அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விமான நிலைய விரிவாக்க பணிகளும், போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகளில் மேம்பாலப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் நடந்து வரும் சாலை பணிகளால் மோசமான சாலைகளாலும், போக்குவரத்து நெரிசல்களினாலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நகர வளர்ச்சி காரணமாக மரங்கள் வெட்டப்படுவது, காடுகள் சுருக்கம் உள்ளிட்ட காரணங்களால் தட்ப வெப்ப நிலை மாறி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
எது எப்படி இருந்தாலும் ஆட்சியாளர்களின் உதவி இன்றி, மக்களின் உழைப்பால் உயர்ந்து வளர்ந்து நிற்கும் நகரமாக கோவை மாநகரம், தனிச்சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. இன்று 219 வது பிறந்த நாள் கொண்டாடும் கோவை மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்.