பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை விமர்சித்த நாளிதழிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


காலை உணவு திட்டம் தொடர்பான செய்தி:


கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், அண்மையில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் அதுதொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்த தமிழ் நாளிதழ் ஒன்று, கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் அந்த செய்திக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.






ஸ்டாலின் கண்டனம்:


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில் “உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என சமூக நீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.






 

உதயநிதி கண்டனம்:

 

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்” என விமர்சித்துள்ளார். குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட நிறுவனம் தொடர்பான விமர்சனங்கள் தற்போது டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.