தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். அலுவல் பணிகளை மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி எப்படி அகற்றப்பட்டது?. 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தும் கோடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. கொலை, கொள்ளை நடைபெற்ற கோடநாடு சாதாரண இடமில்லை. அந்த குற்றங்களை எதில் சேர்ப்பது?. அங்கு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது சிசிடிவி ஏன் செயல்படவில்லை? என பல கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, “கோடாநாடு எஸ்டேட் தனியாரின் சொத்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின் அங்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பு அகற்றப்பட்டது” என்று பதிலளித்தார்.
மேலும், கோடநாடு வழக்கை விசாரிக்க கூடாது என நீதிமன்றத்திற்கு எதற்காக சென்றீர்கள் என முதல்வர் எழுப்பிய கேள்விக்கு, கோடநாடு சம்பவம் நடைபெற்றவுடன் முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை கேட்டது ஏன் ? என எழுப்பிய கேள்விக்கு, வழக்கிற்கு நாங்கள் தடை கேட்கவே இல்லை, நீதிமன்றத்தில் வழக்கு முறைப்படி நடைபெற்று வருகிறது. எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்று எடப்பாடி பழனிசாமி பதில் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொலை, கொள்ளை கட்டப்பஞ்சாயத்து போன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு, தூத்துக்குடியில் ஜீப் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிமுக ஆட்சியில் தானே. அப்போது நீங்கள் தானே முதல்வர் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். கலவரங்களை தவிர்க்க துப்பாக்கிச்சூடு தவிர்க்கமுடியாது என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். தனிப்பட்ட பிரச்னைக்காக துப்பாக்கிசூடு நடத்தவில்லை
எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா இன்னும் தடையின்றி கிடைத்து வருகிறது என எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்டதற்கு, குட்கா இன்னும் இருக்கிறது. அதனை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குட்கா வழக்கில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார்.