அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்றும், ஒட்டுமொத்த மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ.7, 500 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின்போது, சுமார் 13,500 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த பணி நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வந்தது. அதில், வழங்கப்பட்ட பணி முழுவதும் திமுகவினருக்கே வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.


தொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு சட்டபேரவையில் வெற்றிப்பெற்ற அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, மக்கள் நலப்பணியாளர்கள் பணி தேவையில்லாதது என்று அனைவரையும் பணியில் இருந்து நீக்கினார். இதன் காரணமாக வழக்கு தொடரப்பட்டது. 


இந்த பணி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கொரோனா கால கட்டத்தில், வாழ்வதாரம் இழந்துள்ள தங்களுக்கும், அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது.  கடந்த விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்ததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மீண்டும் மக்கள் நலப் பணியாளர்கள் பணி நியமனத்தை கையில் எடுத்திருப்பது மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


காங்கிரஸா? கலால் வரியா? : கடுமையான பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? விரிவான அலசல்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண