உலகத்திலேயே இந்தியாவில்தான் எரிபொருளுக்கு அதிக வரி வைத்து விற்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி, நுழைவு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் விலையேற்றத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளன.
பெட்ரோல் விலை இன்று (ஏப்ரல் 8) டேராடூனில் குறைந்தபட்சமாக லிட்டருக்கு ரூ.103.73 ஆகவும் அதிகபட்சமாக அவுரங்காபாத்தில் ரூ. 122.13 ஆகவும் உள்ளது. அதே நிலையில் டீசல் விலை ஜம்முவில் குறைந்தபட்சமாக லிட்டருக்கு ரூ.90.26 ஆகவும் அதிகபட்சமாக அவுரங்காபாத்தில் ரூ.106.38 ஆகவும் உள்ளது. இதற்கு, மொத்த விலையில் பாதியளவுக்கு உள்ள வரிவிதிப்பே காரணமாகும்.
டெல்லியில் வரிவிதிப்புக்குப் பிறகு பெட்ரோல் விலை
டெல்லியில் ஏப்ரல் 1 நிலவரப்படி, விற்பனையாளர்களுக்கு இந்தியன் ஆயில் விற்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.53.34 ஆகும். கூடுதலாக 20 காசுகள் சேர்க்கப்பட்டு, ரூ.53.34-க்கு விற்கப்படுகிறது. இத்துடன் கலால் வரி லிட்டருக்கு ரூ.27.90 சேர்க்கப்படுகிறது. விற்பனையாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 3.83 கமிஷனாக அளிக்கப்படுகிறது. இதுதவிர மதிப்புக் கூட்டு வரி லிட்டருக்கு ரூ.16.54 சேர்க்கப்படுகிறது. இதனால் வரிகளோடு ஒட்டுமொத்தமாக நுகர்வோருக்கு விற்பனை விலை ரூ.101.81-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுவே டெல்லியில் 1 லிட்டர் டீசலின் அடிப்படை விலை ரூ.54.87 ஆக உள்ளது. பல்வேறுகட்ட வரி விதிப்புக்குப் பிறகு இந்த விலை, நுகர்வோருக்கு ரூ.93.07 ஆக உயர்ந்துள்ளது.
137 நாட்களுக்குப் பின் உயர்ந்த விலை
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த சூழலில், கடந்த 2021ஆம் ஆண்டு கடைசியாக நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அதையடுத்து 137 நாட்களுக்குப் பின்னர் 2022 மார்ச் 22ஆம் தேதி விலையேற்றம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு இன்று வரை 18 நாட்களில் 14 முறை விலை உயர்ந்துவிட்டது.
குறிப்பாகக் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்து சாமான்ய மக்களை திகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த சூழலில், ஒரே நாடு, ஒரே வரி; ஒரே நாடு ஒரே தேர்வு, ஒரே நாடு, ஒரே தேர்தல் வரிசையில் ஒரே நாடு, ஒரே விலை என்ற பிரச்சாரத்தை மத்திய பாஜக அரசு ஏன் முன்னெடுக்கவில்லை என்று கேள்வி எழுகிறது.
கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் விலை உயர்ந்துள்ள சூழலில், தமிழ்நாட்டு எல்லையோரம் வசிக்கும் அம்மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பெட்ரோல், டீசலை வாங்கிச் செல்கின்றனர்.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
ரஷ்யா- உக்ரைன் போரால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஆகியவற்றால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ்தான் காரணமா?
மத்திய பாஜக சார்பில் தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம். இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளில் முந்தைய அரசு ஈடுபட்டிருந்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.
பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்கிறார் தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கத் தலைவர் முரளி. இதுகுறித்து அவர் ’ஏபிபி நாடு’விடம் கூறியதாவது:
பெட்ரோல் விலை கணக்கீடு
’’ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசலின் விலை சராசரியாக 0.75 பைசாக்கள் உயர்கிறது. தினந்தோறும் இவ்வாறு அதீதமாக அதிகரிக்க 137 நாட்கள் விலை ஏற்றாமல் இருந்தது முக்கியக் காரணம். அதேபோல சவுதி அரேபியாவின் எண்ணெய் வளக் கட்டமைப்பின்மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்தது.
உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமடைந்தது. அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி வெகுவாகக் குறைந்து, விலை அதிகரித்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்கள் விலையை ஏற்றாத காரணத்தால், பெருத்த நஷ்டத்தைச் சந்தித்தனர். அதை ஈடுகட்டவே தினந்தோறும் விலை ஏற்றப்படுகிறது.
விலை எப்போது இறங்கும்?
எங்களைப் பொறுத்தவரை பெட்ரோல்- டீசலின் விலை குறைய வாய்ப்பே இல்லை. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் நிச்சயம் விலையைக் குறைக்கப் போவதில்லை. நட்டத்தில் இருந்து, அவர்கள் லாபம் ஈட்டும்வரை தொடர்ந்து விலை ஏற்றம் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்குப் பிறகுதான் விலை ஓரளவு நிலையாக இருக்கும்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனாலும் விலை நிலையாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் எண்ணெய் வளம் பெரும்பாலும் கிடையாது என்பதால், வெளிச்சந்தையில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
என்ன செய்தால் விலை குறையும்?
இத்தகைய சூழலில் வழக்கமாக மத்திய அரசு கலால் உள்ளிட்ட வரிகளைக் குறைக்கும் போக்கைக் காண முடியும். அவ்வாறு இந்த முறையும் அரசு செய்தால், மக்களின் பாதிப்பு வெகுவாகக் குறையும். இதனால் அரசுக்குக் கிடைக்கு லாபத்தின் மதிப்பு குறையும். இதைத் தவிர்த்து விலையைக் குறைக்க வேறு எந்த வாய்ப்பும் இல்லை.
எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயத்தை மத்திய அரசுதான் மேற்கொண்டு வந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு அந்த முறையை நீக்கிய அரசு, விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அதனால் இப்போது விலை நிர்ணயத்தை அரசு கட்டுப்படுத்த முடியாது. எனினும் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை'' என்கிறார் முரளி.
விலைவாசி உயர்வு
தொடர்ந்து தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால், உணவு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. தேநீர்க் கடைகள் டீ, காபியின் விலையை ஏற்றியுள்ளன. இந்த விலையேற்றத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, இந்தியரின் ஒரு நாளைய வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை (23.5) எடுத்துக்கொள்வதாக சர்வதேச ஆற்றல் விலைக் குறியீடு தெரிவித்துள்ளது. 1 லிட்டர் டீசலின் விலை, இந்தியரின் ஒரு நாளைய வருமானத்தில் 20.9 சதவீதமாக உள்ளது. இது அமெரிக்காவில் முறையே 0.6 மற்றும் 0.7 ஆகவும் சீனாவில் 4.1 மற்றும் 3.7 ஆக உள்ளது.
வாகனங்களின் விற்பனை சரிவு
எரிபொருள் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால், இருசக்கர வாகனம், கார்கள் உட்பட வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளது. 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2022 மார்ச் மாதத்தில், வாகனங்களின் விற்பனை 30% அளவுக்குக் குறைந்துள்ளது. 2021 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2022 மார்ச் மாதத்திற்கான மொத்த சில்லறை விற்பனை 3 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் 2020 மார்ச் மாதத்தின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது சுமார் 30% குறைந்துள்ளது.
இந்தியாவைப் போலவே இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் எரிபொருள் கட்டணத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை, பாகிஸ்தானைத் தொடர்ந்து பெரு நாட்டிலும் போராட்டம்
பெட்ரோல்- டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை ஏற்றம், சுங்கக் கட்டண விலை உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து பொது மக்களின் போராட்டம் காரணமாகப் பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நிரந்தரத் தீர்வு உண்டா?
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை 2 வழிகளில் நிரந்தரமாகக் குறைக்கலாம்.
1. நிலக்கரி, எண்ணெய் உள்ளிட்ட புதுப்பிக்க முடியாத வளங்களின் பயன்பாட்டை குறைத்து, மரபுசாரா எரிபொருள் எனப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். உதாரணத்துக்கு மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். எனினும் இந்தத் திட்டம் நீண்ட கால அடிப்படையிலானது. உடனடியாக அமல்படுத்த முடியாத ஒன்றாகும்.
2. உள் நாட்டிலேயே எண்ணெய் வள உற்பத்தியை அதிகரித்து, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது அடுத்த வழியாகும். எனினும் இல்லாத எண்ணெய் வளத்தை இந்தியாவில் உற்பத்தி செய்வது நடைமுறையில் சாத்தியமான ஒன்றல்ல.
இதனால் அதிக செலவுக்கு வழிவகுக்கக் கூடிய தனிநபர் போக்குவரத்தைக் குறைத்து, பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரிப்பது, சூழலியல் நோக்கிலும் பொருளாதார நோக்கிலும் சரியாக இருக்கும்.