மேட்டூர் அணை..


குறுவை, சம்பா சாகுபடிக்கு இன்று 89 வது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. அணையை திறப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். சேலம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, வழி எங்கும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று காலை 10 மணியளவில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 



மே மாதத்தில் முதல்முறை..


டெல்டா பாசனத்திற்காக 89 வது ஆண்டாக திறக்கப்பட உள்ள மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வழக்கமாக ஜூன் மாதம் 12 ஆம் தேதி குறுவை சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். இதுவரை ஜூன் மாதத்தில் 12 ஆம் தேதிக்கு முன்பாக 10 முறையும், நீர் இருப்பு குறைவாக இருந்த காரணத்தினால் ஜூன் மாதம் 12 ஆம் தேதிக்கு பின்னர் 60 முறையும், ஜூன் மாதம் 12 ஆம் தேதி 18 முறைகள் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்ந்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தாலும், அணையிலிருந்து குறைவான அளவு நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டு 105 அடிக்கும் அதிகமான அளவில் நீடித்து வந்தது.



டெல்டா பாசனத்திற்காக காவிரியில் மே மாதமே தண்ணீர் திறக்கப்படுவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுதான் ரூட்...


இன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீரானது வருகின்ற 27 அல்லது 28 ஆம் தேதிகளில் கல்லணை சென்றடையும். இதன் மூலம் 16.5 லட்சம் ஏக்கர் வசனம் பெறவுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.