பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கான கலால் வரியை மத்திய அரசு கடந்த சனிக்கிழமை குறைத்தது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாய் வரை குறைத்தது. அத்துடன் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை குறைத்தது. மேலும் அந்த அறிவிப்பில் மாநிலங்கள் தங்களுடைய வாட் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய நிதியமைச்சர் வைத்திருந்தார். அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அதில், “திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக தமிழ்நாட்டின் வாட் வரி மத்திய அரசின் கலால் வரியை விட மிகவும் அதிகமாக உள்ளது. ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையில் மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்கிறார் என்றால் அவர் இரண்டு விஷயங்களை உடனே செய்ய வேண்டும்.
முதலில் பெட்ரோல் மீதான வரியை 2 ரூபாயையும், டீசல் மீதான வரியை 4 ரூபாய் வரையும் குறைக்க வேண்டும். அத்துடன் 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியான அரசாணையை திரும்ப பெற வேண்டும். மேலும் பெட்ரோல் மீதான வாட் வரியை விற்பனையாகும் விலையிலிருந்து சதவிகிதமாக கணக்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக பெட்ரோலின் விலையை சுமார் 23 ரூபாய் வரை (250%) உயர்த்தியுள்ளது. அதேபோல் டீசலின் விலையை சுமார் 29 ரூபாய் வரை(900%) உயர்த்தியுள்ளது. இந்த அளவிற்கு விலையை ஏற்றும் போது மாநிலங்களிடம் ஒரு தகவல் கூட சொல்லவில்லை. தற்போது அதில் 50% விலையை மட்டும் குறைந்துவிட்டு மாநிலங்களை தங்களுடைய வரியை குறைக்க சொல்வது எப்படி நியாயம். இது தான் கூட்டாட்சி தத்துவமா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்