சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.  இந்நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார்.


முதலமைச்சரின் கட்டளை:


இந்த நிகழ்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வைரமுத்துவின் 15 நூல்களை வெளியிட்ட கைகள் கலைஞரின் கைகள். இது அவர்கள் இருவருக்கும் இருந்த நட்புக்கு பெருமை. நான் கவிஞனும் அல்ல. கவிதை விமர்சகனும் அல்ல. கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்து கோலோச்சிய கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால் 'மகா கவிதை' நூலை தீட்டிய கவிப்பேரரசு வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார்.


வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு பட்டமே கலைஞர் வழங்கியது தான். கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுதிக் தாருங்கள் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.   வைரமுத்துவுக்கு ஒரு ரசிகனாக என்னுடைய வேண்டுகோள் இது. இன்னும் சொல்லப்போனால் கட்டளை” என்றார். 


"வைரமுத்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்”


தொடர்ந்து பேசிய அவர், ”கவிப்பேரரசு வைரமுத்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அவற்றை வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.  படைப்பு, புத்தகத்தை தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும் கருத்துமாக இருப்பார்.  அந்த வகையில், படைப்பு உலகத்துக்கு மட்டுமல்ல, பதிப்பு உலகத்துக்கும் 'மகா கவிதை' நூல் மகுடமாக அமைந்துள்ளது.


ஐம்பூதங்களும் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதையில் அடங்கிக் கிடக்கின்றன. மண், நீர், காற்று, வானம் மாசு அடைந்துள்ளதால் சுற்றுச்சூழல் மாறியுள்ளது.  'மண்ணியல், விண்ணியல் மாற்றத்தை பொருட்படுத்தாவிடில் ஐப்பூதங்களும் எதிராய் மாறிவிடும்’ என்கிறார் கவிஞர்.  அதிக மழைக்கான உண்மையான காரணங்களை வைரமுத்து தனது நூலில் கூறியுள்ளார்" என்றார் முதல்வர் ஸ்டாலின். 


"எவ்வளவு மழை பெய்யும் என்பதை தெரிவிக்கவில்லை”


மேலும், "மிக முக்கியமான காலகட்டத்தில் ’மகா கவிதை’ நூலை எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்துவை பாராட்டியாக வேண்டும். 100ஆண்டுகள் இல்லாத மழை பெய்தது என்கிறார்கள். ஆனால், அவ்வளவு மழை பெய்ததற்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை. சென்னை, தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று தான் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சொன்னார்கள்.


ஆனால், எவ்வளவு  பெய்யும் என்று சொல்லவில்லை.  ஏரி உடைந்ததைப் போல, வானம் உடைந்து கொட்டியது போல மழை பெய்துள்ளது.  நவீன அறிவியலை சொல்லும் திறன் கொண்டது தமிழ் மொழி என்பதை நிரூபிக்கிறது வைரமுத்துவின் நூல்.  உலகத்துக்கே தேவையானவற்றை பேசுகிறது வைரமுத்துவின் ’மகா கவிதை’ நூல்.  கவிஞர்  வைரமுத்து எழுதிய நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.




மேலும் படிக்க


IPS Reshuffle: ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு! 10 பேருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு அதிரடி!