கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 17-ந் தேதி நேரில் சந்திக்க உள்ளார் என்று அறிவிப்பு வௌியானது.


இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக இன்று டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதையடுத்து, டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடுத்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தில் தற்போது உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம், அதை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், கொரோனா பரவலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பிரதமரிடம் முதல்வர் எடுத்துக்கூற உள்ளார்.


தமிழகத்தில் கடந்த மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 1 கோடிக்கு மேற்பட்டோர்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு போதியளவில் கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை முதல்வர் இந்த சந்திப்பில் வலியுறுத்த உள்ளார்.


இது மட்டுமின்றி, தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால், இந்த சந்திப்பின்போது செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார்.




பின்னனர், தமிழக்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களின் வாழ்வாதார பாதிப்பு, தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, இதன் காரணமாகவும், மக்களுக்கு அளித்துள்ள நலத்திட்ட மற்றும் நிவாரண உதவிகளால் தமிழக அரசுக்கு ஏற்பட்டு நிதி நெருக்கடி குறித்தும், இதனால் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்தும் கோரிக்கை விடுக்க உள்ளார்.


நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு பூஞ்சை நோயால் தமிழகமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நோய்க்கு மருந்தான ஆம்போடெரிசின் பி யை போதியளவில் தமிழகத்திற்கு ஒதுக்கவும் பிரதமர் மோடியை முதல்வர் வலியுறுத்த உள்ளார்.


இதுதவிர, ஊரடங்கால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, நடப்பாண்டில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு சேர்க்கை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இதுதவிர, தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. வரி வருவாய் பாக்கி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த சந்திப்பின்போது, மூத்த அமைச்சரான துரைமுருகன் உடன் உள்ளார். மேலும், இந்த சந்திப்பிற்கு பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் சிலரையும் நேரில் சந்திக்க உள்ளார்.


மேலும் படிக்க : Shiva Shankar Baba : கைதுசெய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்!