ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அனுமதி தேவை என சிவசங்கர் பாபா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு. நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டுவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் இரவு முழுவதும் தொடர் விசாரணை மேற்கொண்டனர், அதன் பின்னர் இன்று காலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாலை 4.20 மணி அளவில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர் செய்யப்பட்டார். அப்போது தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அனுமதி தேவை என சிவசங்கர் பாபா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி அம்பிகா அதனை நிராகரித்தார். இந்நிலையில் சிபிசிஐடியினர் அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



மேலும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர் செய்யப்பட்டபோது அவரின் ஆதரவாளர்கள் பலர் நீதிமன்ற வாயிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் சிவசங்கர் பாபா ஆதரவாளர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.


சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டது எப்படி ?


முன்னதாக சிவசங்கர் பாபா தப்பி ஓட திட்டமிட்டதாக தகவல் வந்ததை அடுத்து டில்லி விரைந்தது தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார். புகாரை கூறி, அவரை கைது செய்வதாக போலீசார் கூற, தன் வசம் வேறு பாயிண்ட் எதுவும் இல்லாத நிலையில், விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல அவர்கள் பின் நடந்தார் சிவசங்கர் பாபா. 


இதனைத் தொடர்ந்து, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்றிரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 


மேலும் அறிய : சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மை - சிபிசிஐடி தகவல்


இந்நிலையில், சிவசங்கர் பாபாவிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடைபெற்றது. பெண் ஆய்வாளர் உட்பட 5 அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வீடியோ பதிவு செய்துள்ளனர். விசாரணையில்,  சிவசங்கர் பாபாவுக்கு டேராடூன் மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது உறுதியானது. மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்தது. அதன் பின்னர் இன்று காலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாலை 4.20 மணி அளவில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் சிவசங்கர் பாபா ஆஜர் செய்யப்பட்டார். சிபிசிஐடியினர் அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.