கடந்த மார்ச் 2 ம் தேதி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸில் 2வது இந்திய ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.42 மீ தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்தார். 


இதையடுத்து, ஜெஸ்வின் ஆல்ட்ரின் புதிய தேசிய சாதனை படைத்ததாக இந்திய தடகள கூட்டமைப்பு ட்வீட் செய்தது. அதில், “ இந்த போட்டியில் பங்கேற்ற 21 வயது ஜெஸ்வின் ஆல்ட்ரினின் திறமை வியக்க வைக்கிறது. எட்டு மீட்டர் தாண்டிய ஒரே நீளம் தாண்டுதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 8.05 மீட்டர் பாய்ச்சலுடன் முதல் முயற்சியை தொடங்கும் போதே வெற்றியாளர் இவர்தான் என்ற உறுதி தந்தார்” என பதிவிட்டு இருந்தார். 


 8.42 மீ தாண்டி முதல் இடத்தை பிடித்த ஜெஸ்வின் ஆல்ட்ரினுக்கு தங்கமும், 7.85 மீட்டர் தூரம் தாண்டிய முகமது யாஹியாவுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்தது. தொடர்ந்து, 7.77 மீ தூரத்தை தாண்டிய ரிஷப் ரிஷிஷ்வருக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டது. 






இந்தநிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க ஜெஸ்வின் ஆல்ட்ரினுக்கு இப்போதே என் வாழ்த்துகள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவர் நேற்று வெளியிட்ட பதிவில், “பெல்லாரி Indian Open Jumps competition-இல் 8.42மீ தாண்டி தேசிய சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் அல்ட்ரின்,  2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றிட இப்போதே வாழ்த்துகிறேன்.


தமிழ்நாட்டு வீரர்கள் உலகெங்கும் செல்ல வேண்டும்; வெல்ல வேண்டும்!” என பதிவிட்டு இருந்தார். 


ஜெஸ்வின் ஆல்ட்ரின் படைத்த முந்தைய சாதனை: 


கடந்த 2020 ஆண்டு தென்னிப்பாலத்தில் நடந்த ஃபெடரேஷன் கோப்பையில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீ தூரம் பாய்ந்து அவரது தனிப்பட்ட சாதனையை படைத்தார். இந்த சாதனை அப்போதே மிக முக்கியமாக பார்க்கப்பட்டது. 






அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஜெஸ்வின் வெள்ளி பதக்கம் வென்றார். இந்த போட்டியில், சீன தைபேயின் லின் யு-டாங் 8.02 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், 21 வயதான ஜெஸ்வின் ஆல்ட்ரின், 7.97 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர். 7.92 மீட்டர் தூரம் தாண்டிய சீனாவின் ஜாங் மிங்குன் வெண்கலப்பதக்கம் வென்றார்.