நரிக்குறவ மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விளிம்பு நிலை மக்களுக்கானது திமுக
அவர் பேசியதாவது, “ இன்று இங்கு வசிக்கும் நரிக்குறவ சகோதரி வீட்டுக்கு சென்று கறிசோறு சாப்பிட்டேன். விளிம்பு நிலை மக்கள் அரசை தேடி வரவேண்டாம். நாங்களே தேடி வந்து அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம். நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 2,084 பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 201 வீடுகளுக்கு கழிப்பறை வசதி நிறைவேற்றப்பட்டுள்ளன. 226 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 7,824 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள். 15,000க்கும் மேற்பட்டோர்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 5991 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், 2880 பேருக்கு அரசின் இலவச மருத்துவ காப்பீடு வசதி தரப்பட்டுள்ளது. 9468 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது” என பேசினார்.
இட்லி சாப்பிட்ட முதல்வர்
சென்னை ஆவடி திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர்களுக்கு இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பேருந்து நிலையம் அருகே நரிக்குறவர் குடியிருப்பில், புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் விளக்குகள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவற்றையும் திறந்து வைத்தார்.
முன்னதாக திவ்யா என்ற மாணவி நம்பிக்கையுடன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், முதல்வர் அவரை வீடியோ கால் மூலம் அழைத்து பேசினார். அப்போது திவ்யா முதல்வர் தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், நிச்சயம் தான் வீட்டிற்கு வருவதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் அவர்களது வீட்டிற்கு சென்ற முதல்வர், அவர்களிடம் சாப்பாடு இருக்கிறதா என்று கேட்க, அவர்கள் தாங்கள் சமைத்து வைத்திருந்த இட்லி, சாம்பார்,வடையை எடுத்து வந்தனர். அதனை ஆசுவாசத்துடன் சாப்பிட்ட அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு ஊட்டி விட்டார்.