தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் கடந்த ஆட்சியில் துணை முதல்வர் பொறுப்பை வகித்தவருமானவர் ஓ.பன்னீர்செல்வம். அவரது தாயார் பழனியம்மாள் நாச்சியார். அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்த பழனியம்மாள் நேற்று இரவு இயற்கை எய்தினார்.




அவரது மறைவு ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தி.மு.க. தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் செய்தியில்,


“முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தாயார் உயிரிழந்த தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக  சென்னையில் இருந்து தேனி புறப்பட்டுச் சென்றார். அங்கு பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை கண்ட ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் விட்டு அழுதார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு செய்தி அறிந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உடனடியாக பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு குவிந்தனர்.




பெரியகுளத்தில் வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு தொடர்ந்து பொதுமக்களும், தொண்டர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உச்சநீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அது பெரும் பின்னடைவாக இருந்தது. இந்த சூழலில், தாயார் மரணம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற  நெருக்கடியான தருணத்தில் தாயாரின் மரணம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிகழ்ந்திருப்பதும், தனது தாயின் உடலைப் பார்த்து ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர்விட்டதும் அவரது ஆதரவாளர்களுக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியார் கடந்தாண்டு உடல்நலக்குறைவால் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மறைந்த பழனியம்மாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட 5 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவர்களில் பாலமுருகன் என்ற மகனும், ஒரு மகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 பேர் தற்போது உள்ளனர். மறைந்த பழனியம்மாளின் இறுதிச்சடங்கு இன்று பெரியகுளத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Erode East By Election: நெருங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்..


மேலும் படிக்க:  Erode Election: திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சிவிட்டது ஈரோடு ஃபார்முலா - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்