கரூரில் நாளை காலை நடைபெறும் திட்டப் பணிகள் துவக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனையொட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருமாநிலையூர் பகுதியில் நடைபெறும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், கரூரில் நாளை நடைபெறும் முடிவுற்ற திட்ட பணிகள் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 86,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க இருக்கிறார். அதற்காக இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை தருகிறார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு நான்கு இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட வரலாற்றில் ஒரே நேரத்தில், ஒரே அரங்கில் 86,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல்முறை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி மாவட்டத்தில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை ஐந்து மாவட்ட போலீசார் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இன்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தடையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு சிறப்பான வரவேற்புக்கு பின் தரை வழி மார்க்கமாக திருச்சி, லாலாபேட்டை, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், புலியூர் வழியாக தான்தோன்றி மலை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள பயனியர் விருந்தினர் மாளிகைக்கு வந்தடைகிறார். அவர் வரும் வழியில் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க பல்வேறு இடங்களில் மேல தாளங்கள், சண்டி மேளங்கள், வண்ண பூக்களால் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரவு கரூர் மாவட்ட வர்த்தக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார் என தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் முதல்வராக பதவியேற்ற பிறகு கரூர் மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தர இருப்பதால் திமுக நிர்வாகிகளும், மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதே நிலையில் கரூர் மாவட்ட திமுக சார்பாக தமிழக முதலமைச்சருக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பு நாளை நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் பயனாளிகள் முதலில் 76 ஆயிரம் என கணக்கிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 10,000 நபர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், விடுபட்டிருந்த பயனாளிகளின் பெயர்களையும் அந்தந்த வருவாய் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர முயற்சிக்காட்டி வருவதாக ரகசிய தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்