‘பணிக்கு ஓய்வு, என் சேவைக்கு ஓய்வு இல்லை’ ; மதுரை தத்தனேரி சுடுகாட்டில் முதியவர் ஹரி நெகிழ்ச்சி..!

”இன்று பணி ஓய்வு பெறுகிறேன். பணி ஓய்வு ஆனாலும் என் சேவைக்கு ஓய்வு இருக்காது, என்கிறார் முதியவர் ஹரி”

Continues below advertisement
ஒரு பக்கம் பிணங்கள் எரிந்துகொண்டே இருக்கும், மற்றொரு பக்கம் வேறு சில பிணங்கள் வந்துகொண்டே இருக்கும். ஓலம் அடங்காத அளவிற்கு தொடர்ந்து வரிசையா உடல்கள் வந்து கொண்டே இருக்கும். தத்தனேரி சுடுகாடு தான் மதுரையில் பெரிய சுடுகாடு. இங்கு பணியாற்றும் 'ஹரி' தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

ஹரி சுடுகாட்டில் வெட்டியான் வேலை மட்டும் செய்வதில்லை அதையும் தாண்டி சமூக சேவையும் செய்து வருகிறார். மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் என்று பல்வேறு பணிகளுக்கு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில்தான், தனது பணியை நிறைவு செய்கிறார். "என்னுடைய பணி நிறைவுபெற்றாலும் சேவை நிறைவடையாது" என நெகிழ்ச்சியாக நம்மிடம் தெரிவித்தார்.

 
காக்கிச் சட்டையில் கால்பந்து வீரர் போல சுடுகாட்டில், சுழன்று கொண்டிருந்த ஹரியை  நேரில் சந்தித்து பேசினோம்...," 55 வருசத்துக்கு மேல தத்தனேரி சுடுகாட்டுல தான் வேலை செய்றேன். ஒவ்வொரு உடலையும் உறவுக்காரங்களா நினைச்சு தான் எரியூட்டுவேன். இங்க ஏழை,  பணக்காரங்க எல்லாரும் வருவாங்க எல்லாத்தையும் ஒரே மாதிரி தான் நினைப்பேன். வசதியான நபர்களுக்கு வேகமா எரிய ஒரு தூக்கு வெறகு எக்ஸ்ட்ரா வாங்கிக் கொடுப்பாங்க அவ்வளவு தான் வித்தியாசம். ஏழை, பணக்காரன், மேல் சாதிக்காரன், கீழ்சாதிக்காரன் எல்லாரும் எரிஞ்சுட்சா சாம்பல் தான். இதையெல்லாம் பார்த்த எனக்கு நாமும் ஒருனா சாம்பல் தானு நினைச்சு தப்பு, தண்டா செய்ய மனசு வரல.

அதனால எனக்கு இயல்பாவே சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருச்சு. என்னால முடிஞ்ச உதவிய இன்னவரைக்கும் செஞ்சுகிட்டு இருக்கேன். இதுனால் வரைக்கும் 3 லட்சத்தி 17 ஆயிரம் பிணங்களை எரியூட்டி  இருக்கேன். மதுரையின் முதல் மேயர் முத்து, கம்யூனிஸ்ட் எம்.பி மோகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் மரியாத செஞ்சு எரியூட்டி இருக்கேன். காசு பணம் ஏழை எளிய மக்களின் உடல்களையும் எரியூட்டி இருக்கேன். அவங்கள்ட்ட பணம் இல்லேனா என்னால் முடிஞ்ச பணத்தை கொடுத்து உதவி இருக்கேன். தத்தனேரி பகுதியில் மட்டும் 1300 மரக்கன்றுகள் வளர்த்து உருவாக்கியிருக்கேன்.   

 
ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பிற்கு கூட உதவி இருக்கேன். பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த மூட்டைகளில் சேகரித்த பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளேன். இப்படி பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டதால் அப்போதைய மதுரை மாநகராட்சி ஆணையர் சந்திப் நந்தூரி, உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் எனக்கு விருது வழங்கியுள்ளனர். அது எனக்கு ஊக்கத்தை அளித்தது, தொடர்ந்து இப்படிப்பட்ட பணியில் ஈடுபட்டு வருகிறேன்.  இந்நிலையில் பணி ஓய்வு பெற்றுள்ளேன். பணி ஓய்வு ஆனாலும் என் சேவைக்கு ஓய்வு இருக்காது, என்கிறார் ஹரி.
 
 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement