முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, இன்று சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடக்க உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார். இதனை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் வவர் செல்வது இன்பச் சுற்றுலா என  எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 


அந்த அறிக்கையில், "அம்மா ஆட்சியிலும், அம்மாவின் அரசும் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாகவும், தொழில் துறையின் முன்னேற்றத்திற்காகவும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தி 242 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்; சிறு, குறு மற்றும் நடுத்தரத் துறை சார்பாக 16,532 கோடி ரூபாய் மதிப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டன. எங்கள் ஆட்சியின் இறுதியில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 44 திட்டங்கள் வணிக உற்பத்தியைத் துவக்கிவிட்டன. 27 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருந்தன. எங்கள் ஆட்சியின் இறுதியில் சுமார் 72 சதவீத திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தது.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களைத்தான் கடந்த இரண்டு வருடங்களாக, இன்றுவரை விடியா திமுக அரசு நாங்கள் செய்ததாகக் கூறி வருகிறது. புதிதாக எந்த ஒரு வெளிநாட்டு ஒப்பந்தமும் இந்த ஆட்சியில் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை.


அம்மா ஆட்சியின்போது, தேசிய அளவிலான GDP-யுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் GDP கூடுதலாக இருந்தது. "தான் திருடி பிறரை நம்பாள்" என்பது போல் இன்றைய ஏமாற்று அரசின் ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியாக இருந்தபோது அம்மாவின் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியதை மக்கள் மறக்கவில்லை நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த இந்த விடியா திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுமக்களுக்கு பணப் பலன் அளிக்கக்கூடிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், புதிய திட்டங்களையும் தொடங்காமல், "கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்'' செய்வதிலேயே முதலமைச்சரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


விடியா அரசின் அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் அவர்களே, "குறுகிய காலத்தில், முதலமைச்சரின் மகனும், மருமகனும் அடித்த 30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிப்பதாக" ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது. இந்த ஆட்சியின் ஊழலை பறை சாற்றுகிறது.


2021-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் ஏழை பங்காளனாகவும், ஊழலை ஒழிக்கும் போராளியாகவும், சாமானிய மக்களின் தோழனாகவும் நடித்து பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மக்களை நம்ப வைத்து, வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளே தன் சுயரூபத்தைக் காட்டி, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் தனி விமானத்தில் மதுரைக்கும், அங்கிருந்து கொடைக்கானலுக்கும் இன்பச் சுற்றுலா சென்று வந்தவர்தான் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.


பிறகு ஆட்சிக்கு வந்தவுடன், தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின். ஒருசில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார். 6,000 கோடி முதலீடுகள் வரும் என்று வாயால் வடை கட்டார். இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்யச் சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகார் குறித்து" இதுவரை முதலமைச்சர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை.


தொழில் சுற்றுலா என்று விடியா அரசின் முதலமைச்சருடைய மகன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தமிழக மக்களைப் பற்றி கவலையில்லாமல் மாறிமாறி மற்றும் வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


இந்த நிலையில் ஏற்கெனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட விடியா அரசின் முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.


முன்னாள் நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து பேசிய ஆடியோ டேப் லீக் ஆனவுடன், மருமகளும், மகனும் பதறிப் போய் உடனடியாக லண்டன் சென்று வந்தனர். தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் இன்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து தமிழ் நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? என்று தமிழக மக்களும் சமூக ஊடகங்களும் கேள்வி எழுப்பியுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.