சென்னையில் வியாசர்பாடியில் கொட்டும் மழைக்கு இடையே நடந்த திருமணத்தில் முதலமைச்சர் ஸ்வீட் சர்ப்ரைஸாகப் பங்கெடுத்துக் கொண்டது அங்கே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகக் கொட்டித் தீர்த்து வரும் மழையால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளக்காடாகி உள்ளது. இதற்கிடையே நகரம் முழுவதும் ஜீப்பில் பயணம் செய்து பேரிடர்காலத் துரித நடவடிக்கைகளைப் பார்வையிட்டு வருகிறார் முதலமைச்சர்.





 அப்படி இன்று பார்வையிடச் சென்ற இடத்தில் நடந்த திருமணம் ஒன்றில் சர்ப்ரைஸ் விருந்தினராகப் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கௌரி சங்கர் (23) இவர் அந்தப் பகுதியின் கண்ணகி நகரில் வசித்து வருகிறார். இவரும் கொரட்டுரைச் சேர்ந்த மகாலட்சுமி (22) என்பவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இதற்கிடையே இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் இன்று வியாசர்பாடி பாளையத்தம்மன் கோவிலில் நடந்தது. திருமணம் முடிந்து விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் அந்த வழியாகச் சென்ற முதலமைச்சர் இருவருக்கும் திருமணம் நடந்ததை அறிந்து தனது ஜீப்பிலிருந்து இறங்கி மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றுள்ளார். 






இதுகுறித்து நம்மிடம் பேசிய மணமகன், ‘முதலமைச்சர் இந்தவழியா வர்றதா சொன்னாங்க. நாங்க அவர் ஜீப் போறதைப் பார்த்ததும் விருந்து சாப்பிட்டுட்டு இருந்த ஹோட்டல் வாசலில் இருந்து தலைவரேனு கத்தினோம். சும்மா கையசைச்சுட்டுப் போயிருந்தாலே நாங்கள்லாம் கொண்டாடியிருப்போம். ஆனா திருமணம் நடந்திருக்கறதைப் பார்த்துட்டு ஜீப்பிலேர்ந்து இறங்கினார். நாங்கள் கால்ல விழுந்து ஆசி வாங்கினோம். இருவரையும் தூக்கிவிட்டு, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லபடியா பார்த்துக்கங்கனு வாழ்த்திட்டுப் போனார்’  என்றார். 


முதல்வரே தனது திருமணத்துக்கு வந்ததை இன்னமும் நம்பமுடியாமல் வாயடைத்துப் போயிருந்த மகாலட்சுமி  பேசுகையில்,’என்ன சொல்லறதுனே தெரியலைங்க. எங்க திருமணத்துக்கு இதைவிடப் பெரிய கிஃப்ட் வேற எதுவும் இருக்க முடியாது’ எனக் கூறி மகிழ்ந்தார். 


மழையில் திருமணம், முதல்வர் வருகை என மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்த மணமக்களுக்கு நாமும் வாழ்த்துகளைப் பகிர்ந்தோம்.