இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிகளின் ஆலோசனைக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருப்பார் என்று தகவல்கள் வெளியான நிலையில் அதனை எதிர்த்து வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வழக்கறிஞர் ஸ்ரீதரன் தொடர்ந்த வழக்கில், "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிகளின் ஆலோசனைக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருக்க வேண்டுமென்றால் அவர் இந்துக் கடவுளின் முன் தான் இந்து மதத்தைப் பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்க வேண்டும்.
ஏனெனில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் இத்தகைய உறுதிமொழியை எடுப்பது கட்டாயமாக இருப்பதால் அதனை முதல்வர் ஸ்டாலினும் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனு குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு விசாரித்தனர். அப்போது அவர்கள், "இது மிகவும் கோளாறான ஒரு மனு. மலினமான புத்தியுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்முடிவுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு" என்று கடுமையாக விமர்சித்தனர்.
குழு அமைக்கலாமா? அதிகாரி சொல்வதென்ன?
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிகளின் ஆலோசனைக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருப்பது, குறித்து அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிகளுக்கென ஆலோசனைக் குழு அமைப்பது அதன் சட்டப்பிரிவு 7ன் கீழ் சாத்தியமே. இந்தக் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைவராகவும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு துணைத் தலைவராகவும் இருப்பார்கள் என்று தெரிகிறது.
இந்தக் குழுவில் எத்தனை அலுவல் சாராத உறுப்பினர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஒருவராவது பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியம். இது போன்றதொரு குழு கடந்த 2012ல் அமைக்கப்பட்டது. அதன் ஆயுட்காலம் 2015ல் முடிவடைந்தது. அதன் அலுவல் சாராத உறுப்பினர்களாக, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் அந்தவன் ஆசிரமம், திருவாதிரை ஆதீனம் ஆகியோரும் சில தொழிலதிபதிர்களும் இருந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், இந்தக் குழுவானது கோயில் நிலங்களை, சொத்துகளை வேறு விதத்தில் நற்காரியங்களுக்காக பயன்படுத்தவும் அதிகாரம் இருக்கிறது என்று கூறினார்.
ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டக் கூடிய அனைத்து கோயில்களுமே முதல்வர் தலைமையில் அமையுள்ள குழுவின் கீழ் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தைக் கடக்கும் கோயில்களின் பட்டியலில் 331 கோயில்கள் உள்ளன. அதேபோல், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் மேல் வருமானம் வரும் கோயில்கள் 47 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.