Swachh Survekshan 2021:  தூய்மை இந்தியா திட்டத்தில், 'திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல்' என்ற பிரிவில் சென்னை மாநகராட்சி முதலிடம் பெற்ற காரணத்தினால் Swacch City Award என்ற விருதை சென்னை மாநகராட்சி  பெற்றது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில், புதுதில்லியில் நேற்று  நடைபெற்ற தூய்மை சுதந்திர பெருவிழாவில் பங்கேற்று உரையாற்றிய குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த், 2021-க்கான தூய்மை கணக்கெடுப்பு விருதுகளையும் வழங்கினார். 


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட தூய்மைப் பணிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.


இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற விருதை தொடர்ந்து ஐந்தாவது முறையாக, இந்தூர் பெற்றது. சூரத், விஜயவாடா ஆகிய நகரங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தன.




10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் சென்னை 45 வது இடத்தைப் பெற்றது. இந்த பிரிவில் மதுரை, கோயம்பத்தூர் உள்ளிட்ட 48 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றிருந்தன. ஒரு லட்சம் மக்களுக்கு கீழ் உள்ள நகரங்களின் பிரிவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விட்டா, லோனாவாலா மற்றும் சஸ்வத் ஆகிய நகரங்கள் முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. சிறந்த கங்கை நகரம் பிரிவில், வாரணாசி விருது பெற்றது.


100க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகள் அடங்கிய மாநிலங்களின் பிரிவில் சத்தீஸ்கர், தொடர்ந்து 3வது முறையாக தூய்மையான நகரம் என்ற விருதை பெற்றது. 100 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு குறைவாக உள்ள மாநிலங்கள் பிரிவில், ஜார்கண்ட் 2வது முறையாக தூய்மையான நகரம் என்ற விருதை பெற்றது. 


தூய்மை இந்தியா ஆய்வானது, கீழக்கண்ட 6 விரிவான அளவீடுகள் மூலம் வளர்ச்சியை பற்றி கணக்கிட்டது:


1.  நகராட்சிகளின் திடக்கழிவு சேகரிப்பு (காய்ந்த மற்றும் ஈரமான கழிவுகளை பிரித்து தினமும், வீடுகள் மற்றும் நமது பொது பகுதிகளில் இருந்து அகற்றி சுத்தமாக இருப்பதை உறுதி செய்தல்)


2. நகராட்சிகளின் திடக்கழிவு செயலாக்கம் மற்றும் அகற்றுதல்: நகரங்கள் தங்களுடைய கழிவுகளை செயலாக்கம் செய்தல் மற்றும் தேவைப்பட்டால் அவற்றை மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்தல்


3. சுகாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள்: நகரங்களில் குடிமக்களுக்கு கழிப்பறை வசதி கிடைக்கிறதா என்பதுடன், திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாததை உறுதிசெய்தல். இந்த ஆண்டு நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களும், தங்களுடைய கழிப்பறைகளை பொது கழிப்பறைகளாக பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ளன.


4. ஐஇசி (தகவல், கல்வி மற்றும் தொலைத்தொடர்பு): தூய்மை நகரங்கள் பற்றி நகரங்கள், தங்களுடைய மக்களுக்கு பிரசாரம் செய்து, குடிமக்கள் கழிவு மேலாண்மை, சமுதாய நிர்வாகம் மற்றும் பொது கழிவறை உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிதல்.


5. திறன் கட்டுமானம்: நகர்ப்புற நிர்வாகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சிகளில் கலந்து கொள்ள போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதா மற்றும் அவர்கள் அதை பல்வேறு இடங்களுக்கு சென்று வெளிப்படுத்த வாய்ப்புகள் தரப்பட்டுள்ளதா என்பதை ஆராய்தல்.


6. புத்தாக்கம் மற்றும் சிறந்த பயிற்சிகள்: 2018 ஆய்வில் முதல் முறையாக இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த, பிரிவில் சென்னை மாநகராட்சி அதிக மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.      


சென்னை திடக்ககழிவு மேலாண்மை: 


சுகாதார அட்டை: முன்னதாக, சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய சுகாதார தூதர் அட்டைகள் திட்டம் சுற்றுப்புறச் சூழலில் செயலாக்கத்தில் முன்னோடியாக விளங்குகிறது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் பெருநகர சென்னை மாநகராட்சியால் சுகாதார தூதர்களாக அறிவிக்கப்பட்டு, சுகாதார தூதர் அட்டைகள் வழங்கப்பட்டன.