சென்னையில் தொடர்ந்து 17வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை மத்திய அரசு தீபாவளி தினத்தன்று குறைத்தது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் விலை மாற்றமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்படுகிறது.
முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், ஊரடங்கின் போதும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர். டீசல் மீதான பெரியளவிலான கலால் வரிக் குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், வருகிற நவம்பர் 22 ம் தேதி தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து இந்த போராட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் தமிழக நிதியமைச்சர் பி. தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா ? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தது. அப்போது,ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ என்று தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதிவை பலரும் ரீ - ட்வீட் செய்து தமிழக பாஜகவினரை கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்