சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வடமாவட்டங்கள் மற்றுமு் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.




நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜூன் 28-ந் தேதி ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் , மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.




இன்று முதல் ஜூலை 1-ந் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அவ்வப்போது60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். “எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை கடந்த 3-ந் தேதி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் மாநிலம் முழுவதும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழை அறிவிப்பு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.