ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தடுப்பூசி மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,


விளையாட்டு போட்டிகளில் மிக முக்கியமானது என்னவென்றால் விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனித் திறமை இருந்தாலும், நாம் அனைவரும் ஓரணி என்ற முனைப்புடன் களத்தில் செயல்பட்டால் மட்டுமே களத்தில் வெற்றி பெற முடியும். அரசியலை விளையாட்டாக நினைப்பவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் ஆனால் விளையாட்டுத்துறையை விளையாட்டாக நினைத்துவிடக் கூடாது, அப்படி நினைத்தால் அது விளையாட்டாகவே போய்விடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அரசு விளையாட்டுத்துறையை மேன்மையான துறையாக நடத்த திட்டமிட்டுள்ளோம். விளையாட்டு வீரர்களால் வீராங்கணைகளால் நாட்டுக்கு பெருமை என்ற முதலமைச்சர்.


கிரிக்கெட் போட்டியில் டோனி சிக்ஸர் அடித்தால் ஸ்டேடியத்தில் இருக்கிற மக்கள் அனைவரும் தானே சிக்ஸர் அடித்தது போல் ஒரு உணர்வை உணர்கின்றனர். கால்பந்து போட்டியில் ரோணால்டோ கோல் அடித்தால், தாங்களே கோல் அடித்ததுபோல பார்வையாளர்கள் உணர்வதாக கூறிய ஸ்டாலின், விளையாட்டு வீரர்களுக்கு உடலுறுதியும் ஊக்கமும் அவசியம், விளையாட்டுத்துறை வீரர்களை ஊக்குவிக்கப்பதில் தமிழக அரசும் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.


தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க குழந்தைகளின் திறமைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சி அளிப்பது அவசியம் என்று கூறிய முதலமைச்சர், சென்னையில் பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைத்து எல்லா வகை விளையாட்டிற்கும் அதற்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார்.


ஒலிம்பிக் அகாடமிக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் இந்திய அளவிலான தரவரிசையில் தமிழகத்தையும் உலக அளவிலான தர வரிசையில் இந்தியாவையும் கொண்டு வர முடியும் என்ற அவர், இந்த நிலை தொடர்ந்தால் பதக்கப்பட்டியலில் உலக அளவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை நம்மால் நிச்சயமாக பின்னுக்குத் தள்ள முடியும் என்றார்.


நானும் பள்ளி, கல்லூரி காலத்தில் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்பது உண்டு என்ற முதலமைச்சர், அவ்வாறு பங்கேற்கும் போது விளையாட்டு வீரர்களுக்கு என்ன தேவை என்பதையும் நான் அறிந்து வைத்திருப்பதாக குறிப்பிட்டார். சென்னை மேயராகவும் துணை முதல்வராகவும் இருந்த போது மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களோடு கண்காட்சி போட்டிகளில் இணைந்து விளையாடி இருக்கிறேன் என்ற முதலமைச்சர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட உங்களில் ஒருவனாக உங்களின் முன்னேற்றத்திற்கு வெற்றிக்கு உதவிட என்றும் தயாராக இருக்கிறேன் என்றார். 


மாற்றுத்திறனாளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி போடப்படும்.


ஒரு அணி ரன் எடுத்தும் வெற்றி பெறலாம் அல்லது எதிரணியினர் ரன் எடுப்பதை தடுத்தும் வெற்றி பெறலாம் அதே போல ஒரு அணி கோல் அடித்தும் வெற்றி பெறலாம்; எதிரணியினர் கோல் அடிக்காமல் தடுத்தும் வெற்றி பெறலாம் என்ற முதல்வர் அதே போல் இந்த கொரோனா தொற்று காலத்தில் முதற்கட்டமாக இத்தகைய தட்டுப்பாட்டை கையாள்வதற்காகவே இந்த தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதாக குறிப்பிட்டார். இந்த தடுப்பூசி முகாமை அனைத்து வீரர் வீராங்கனைகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 


ஒலிக்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 3 கோடியும் வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு 2 கோடியும் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 1 கோடியும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.