சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, முதலமைச்சர் முக ஸ்டாலின் மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164 பட்டமளிப்பு விழா தற்போது சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்க இருக்கிறார். இந்தநிலையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, முதலமைச்சர் முக ஸ்டாலின் மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் பனிப்போர் நடந்து வந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்கள் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் செவி சாய்க்கவில்லை என்றும், குடியரசு தலைவருக்கு கொண்டு செல்லவில்லை என்றும் தமிழ்நாடு அரசு வெளிப்படையாக தெரிவித்தது.
மேலும், ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தேநீர் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்பொழுது இந்த தேநீர் விருந்தை நேரடியாக மறுத்த தமிழ்நாடு அரசு அதை புறக்கணிக்கவும் செய்தது.
தொடர்ந்து, பல்வேறு இடங்களில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற கருத்துகளை ஆளுநர் முன்பு தமிழ்நாடு அமைச்சர்கள் பேச, அதற்கும் ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்று வரும் 164 பட்டமளிப்பு விழா மேடையில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அருகருகில் அமர இருக்கின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 931 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்