சென்னை மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டகரை பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் அதிமுகவின் பிரமுகராக அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வருகிறார். மேலும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு மனோகரன் வெற்றி பெற்றார். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிமுக பிரமுகர் என்பதால் அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு மிக்க நபராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை மீன்சூர் அருகே உள்ள குருவிமேடு பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது குருவிமேடு அசோக் லைலண்ட் நிறுவனம் அருகே டிப்பர் லாரி ஒன்று மனோகரன் சென்ற கார் மீது மோதியுள்ளது. தொடர்ந்து கார் நிலைகுலைந்துள்ளது, அப்பொழுது, காரிலிருந்து இறங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை லாரியில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து லாரியில் தப்பிச் சென்றுள்ளனர். மனோகரனை வெட்டும் கும்பலை தடுக்கச்சென்ற அவருடைய மனைவி மற்றும் மகளையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது. இருந்தும் மனைவி மற்றும் அவருடைய மகள்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
ஆனால் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மனைவி மற்றும் அவருடைய மகள்கள் இருவரும் மனோகரனை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். பின்னர், அங்கிருந்த கிராம மக்கள் காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை மீட்டு, சிகிச்சைக்காக விம்கோ நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மனோகரனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மனோகர் உயிரிழந்ததாக கூறினார்.
இதனையடுத்து உயிரிழந்த மனோகரின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய பிரமுகரான மனோகரன் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார், தொழில் போட்டியின் காரணமாக இந்த கொலை நடைபெற்ற அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களுடைய முதற் கட்ட விசாரணையை துவக்கி உள்ளதாக தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்