மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை வெளியிட்டது. அந்தக் கல்வி கொள்கையை தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இந்தச் சூழலில் நேற்று அனைத்திந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் கல்வி கொள்கையை மறுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கேரள உயர்க்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து மற்றும் மகாராஷ்டிரா வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜித்தேந்திரா அவ்ஹாத் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து இடைநிற்றலை அதிகரிக்கும். தமிழ்நாடு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த சமயத்தில் மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் நுழைத் தேர்வு (CUET) என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. ஆகவே புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மாணவர்கள் தங்களுடைய குரலை கொடுக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கல்வித்துறையில் தன்னுடைய விருப்பத்தை திணிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதற்கு தேசிய கல்வி உதவித் தொகை தளம் ஒரு முக்கிய உதாரணமாக அமைந்துள்ளது. அந்த தளத்தில் சமூகத்தில் பின் தங்கியுள்ள பல மாணவர்களுக்கு உரிய கல்வி உதவித் தொகை மறுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, “மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை கல்வியை வியாபாரத்துவமாக்க உதவும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த கொள்கை கல்வியை பலருக்கு எட்டாமல் செய்யும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இது மதசார்பின்மை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவை குறித்து சரியாக விளக்கவில்லை. அதற்கு பதிலாக இது பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் புதிய தேசிய கல்வி கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. இவை தவிர நீட் மற்றும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்