பெத்தேல் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிராக இருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் !


சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நீர் நில பகுதிகளி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பெத்தேல் நகர் என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பல வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சேகர் என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி உத்தரவிட்டது. 


எனினும் இந்த வழக்கின் தீர்ப்பை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை எனக் கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த ஒரு வாரமாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது கடந்த வாரம், “பெத்தேல் நகர் பகுதியில் அமைந்திருக்கும் வீடுகள் மற்றும் வணிகள் வளாகங்கள் ஆகியவற்றை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். மேலும் அந்தப் பகுதியில் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். இதுகுறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 


மேலும் படிக்க: எந்த கட்சியை சேர்ந்த குழுக்களும் எங்கள் ஊரில் வந்து விசாரிக்க வேண்டாம் - மைக்கேல்பட்டி பொது மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை


இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, “பெத்தேல் நகரில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகள் வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1007க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் 65 சுற்றுச்சுவர்களும் இடிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. 




இந்நிலையில் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு இடங்களை இடிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதேபோல் அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை அகற்ற கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களின் மீதான விசாரணையை வரும் 31ஆம் தேதி செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


இதற்கிடையே பெத்தேல் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வருவதால், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை அகற்றும் முடிவையும் கைவிட வேண்டும் என்று கோரி கடந்த 3 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க: சென்னை துறைமுகம்-மதுரவாயல் நெடுஞ்சாலைக்கு விரைவில் கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்!