நாட்டின் மத்திய போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் நிதின் கட்கரி. இவர் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.


அதிவிரைவுச் சாலை:


இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, சென்னை - பெங்களூரு இடையே அதிவிரைவுச் சாலை அமைக்கப்படும் என்றும், அந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் 2 மணி நேரத்திலே பயணம் செய்யலாம் என்றும், இந்த சாலையின் பயன்பாடு வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், நெடுஞ்சாலையில் வாகன நெருக்கடி மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.


குறிப்பாக, இரண்டு பெரிய வளர்ந்த நகரங்களை இணைக்கும் சாலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையையும், கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூரையும் இணைக்கும் வகையில் சென்னை – பெங்களூர் அதிவிரைவுச் சாலை திட்டத்தை அறிவித்தது.


சென்னை - பெங்களூர்:


இதையடுத்து, இதற்கான பணிகள் கடந்தாண்டு முதல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பாரத்மாதா பரியோஜனா திட்டத்தின் கீழ் 26 புதிய எக்ஸ்ப்ரஸ் வே சாலைகளை செயல்படுத்தப்போவதாக அறிவித்தது. இதன்படி, தென்னிந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் வே திட்டமாக சென்னை – பெங்களூர் அதிவிரைவுச் சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்தாண்டு அடிக்கல் நாட்டினார்.


இந்த சாலை அமைக்கப்பட்டால் தற்போதைய பயண நேரமான 5 மணி நேரத்தில் இருந்து, 2 மணி நேரமாக குறைக்கப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார். தற்போதும் அதே கருத்தை அவர் தெரிவித்துள்ளார். 264 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படும் இந்த பெங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலையில் பெங்களூர் ஹோஸ்கோடேவில் தொடங்கி ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்பட்டு வருகிறது.


போக்குவரத்து நேரம்:


நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் இந்த அதிவிரைவுச் சாலையானது கர்நாடகாவின் ஹோஸ்கோடேவில் தொடங்கி மாளூர் வழியாக ஆந்திராவின் வி கோடா, பாலமானேர் ஆகிய பகுதிகளின் வழியாக தமிழ்நாட்டின் குடியாத்தத்திற்குள் நுழைந்து அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னையை அடையும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த சாலை மார்ச் 2024ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று ஏற்கனவே நிதியமைச்சர் கூறியிருந்த நிலையில், தற்போது வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என்று அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த சாலை அமைக்கப்பட்டால் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு போக்குவரத்து நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், இந்த அதிவிரைவுச் சாலை காரணமாக அந்தந்த பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.