நீலகிரி மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “இந்தியா என்ற பெயர் மாற்ற வேண்டும் என தூடிக்கிறார்கள். இந்த ஆட்சியை எதிர்க்கும் எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் குஜராத்தில் நடந்தது இனப்படுகொலை எனவும், அதை திட்டமிட்டு நடத்தியது மோடி தான் எனக்கூறியது. மணிப்பூரில் பழங்குடிகள், கிறிஸ்தவர்கள் நிர்வணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்றதை வீடியோ எடுத்தார்கள். அதை தமிழ்நாட்டில் நடத்த முடியுமா? ஏனெனில் இது பெரியார் மண், அண்ணா மண், கலைஞர் மண். அந்த அயோக்கியத்தனத்தை, காட்டுமிராண்டித்தனத்தை கண்டிக்காமல் மோடி ஓடி ஒளிந்து கொண்டார். இப்படி தான் தேசம் செல்கிறது. ஊழல், மதவாதம் அதிகரித்துள்ளது. 




பிறப்பால், சாதியால் உயர்ந்தவர்களும் அல்ல. தாழ்ந்தவர்களும் அல்ல. மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் மக்களை பிளவுபடுத்துபவர்களை எதிர்க்கும் ஒரே இயக்கமாக திமுக உள்ளது. மோடி என்ற பாம்பை அடித்தால் கடித்து விடும் என பலர் பயப்படுகின்றனர். அந்த பாம்பு கடித்தால் அதற்கான மருந்து தமிழ்நாட்டில் உள்ளது. அது தான் திராவிடம். நமக்கு சனாதனம் என்றால் என்ன எனத் தெரியும். சனாதனம் என்பது கொடூரமான எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்.ஐ.வி. வைரஸ் போன்றது. அதை ஒழித்தே தீர வேண்டும். உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் இளைஞரணிச் செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட டெங்கு, மலேரியா போன்ற நச்சு கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டுமென என தெரிவித்த கருத்தை மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சிந்தனை போதும். இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த இயக்கமும், தத்துவமும் தழைக்கும்” எனத் தெரிவித்தார்.


சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி, "சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான சனாதனத்தை டெங்கு, கொரோனாவை போன்று ஒழித்துக்கட்ட வேண்டும்" என பேசியிருந்தார். ஆனால், அவர் தெரிவித்த கருத்தை திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுக்கிறார்" என எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்து மக்களுக்கு எதிராக உதயநிதி பேசியதாக கருத்து பரவியது. பாஜக, இந்து அமைப்புகள், சனாதன கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் என நாடு முழுவதும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சில மாநிலங்களில் அவர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கு உதயநிதியும், திமுகவைச் சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.